மனிதர்களுடன் சேர்ந்து நகரமும் உறங்கிக்கொண்டிருந்த ஓர் மெல்லிய இரவு. அந்த அப்பார்ட்மென்ட் வீட்டின் எஜமானர் போல நடந்து கொண்டிருந்தான் அவன். வீட்டு எஜமானர்கள் யாரும் ஒரு வாரத்துக்கு ஊரில் இல்லை என்பதால் அவனுக்கு எந்த பயமும் இல்லை. அதோடு இது பணக்காரர்கள் வாழும் இடம், பக்கத்து வீட்டில் நுழையும் திருடனையும் டிஸ்டர்ப் செய்யாத நாகரீகமானவர்கள் வாழும் இடம், இருந்தும் ஒரே குறை, வீடு முழுவதும் தேடியும் பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. நாற்பதனாயிரம் ரூபாய் பீரோலில் நாலாயிரம் கூட இல்லை. இவனுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பேங்க் கார்டுகளும், விலையுயர்ந்த ஆடைகளும் இவனுக்கு முன் ஏப்பம் விட்டிருந்தன, கடைசியாக ஒரேயொரு அறை மட்டுமே பாக்கி, அதுவும் பூட்டபட்ட அறை. அதன் வாசலில் திருப்பதி வாசலில் திருப்பதி கடவுள் ஜொலித்தார் அவரை வணங்கி விட்டு அறையின் கதவை நெருங்கினான். அந்த இத்தாலியின் 'made' கதவு இவனது சைனா சாவிக்கு இசைந்து கொடுத்தது. கதவு திறக்கும் போதே இவன் மணக்கண்ணில் தங்கமும் வைரமும் வெள்ளியும் ஒளிர்ந்தது. கதவை திறந்து விட்டு மெல்ல உள்ளே நுழைந்தான். கதவு இவனுக்கு வழி விட்டு பின்னால் அடைத்துக்கொண்டது. அறை முழுவதும் சுற்றிப்பார்த்தான் தங்கம், வெள்ளி, பணம் எல்லாம் இருந்தது, பெருமாள் ஒரு வழியாக இவன் பக்கம் கண்ணை திருப்பிவிட்டார் என மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான், ஆனந்த கண்ணீருடன் அனைத்தையும் சுருட்டிக்கொண்டான். தன்னை கோடீஸ்வரனாக்கிய அறையை விட்டு வெளியேற மனமின்றி கதவை நோக்கி நடந்தான். அடைத்திருந்த கதவை திறந்தான், கதவு திறக்கவில்லை. அது இறுக அடைந்த்து கொண்டிருந்தது. என்னடா இது எழவாப் போச்சு என்று தனது சாவியை தேடினான், காணவில்லை, அதனை கதவை திறக்கும் போது கதவிலேயே வைத்துவிட்டிருந்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கதவை முட்டி பார்த்தான், மோதி பார்த்தான் , உதைத்து பார்த்தான் அது அசைய கூட இல்லை. அறை முலுவதையும் சுற்றிப் பார்த்தான் அறையில் எந்த சத்தமும் நுழையாது, இருந்த ஒரே சன்னலும் காற்று மட்டும் புகுமாறு சல்லடை ஆடை அணிந்திருந்தது. இது போன்ற அறை புழல் சிறையில் கூட அவன் பார்த்ததில்லை.
சற்று பின்சென்று வேகமாக ஓடி வந்து கதவில் மோதினான். இவன் தான் கீழே விழுந்தான் கதவு அப்படியே நின்றது. உள்ளே வரும் போது காதலியாய் இசைந்து கொடுத்த கதவு இப்போது பொண்டாட்டியாய் தூக்கியெரிந்தது. அவன் உடல் முழுவதும் வியர்த்து கொட்டியது. ஒரு வாரம் யாரும் வர மாட்டார்கள், அக்கம் பக்கத்தில் யாரும் கவனிக்க மாட்டார்கள், இவன் சேர்த்து வைத்த தகவல்கள் சேர்ந்து இவனை மிரட்டியது. கையில் இருந்த பணமூட்டை முதல்முறையாக கணத்தது, அதை இரக்கி வைத்தான். தங்கமும், வெள்ளியும் மறந்து உயிர் மட்டும் உணர்வில் இருந்தது. எப்படியாவது இங்கிருந்து தப்பித்தால் சரி என்றிருந்தது. யாரும் உதவாமால் இங்கிருந்து தப்பிக்க முடியாது என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. இவன் திருடும் போது மொபைல் கொண்டு வருவதில்லை, தொழிலில் அத்தனை பொறுப்பு. தன்னை தானே திட்டிக்கொண்டான். அனைத்து நம்பிக்கையும் இழந்து இறைவா காப்பாற்று என கண்ணை மூடி விழுந்தான். கண்ணை திறந்த போது இறைவன் டேபிளுக்கு அடியில் டெலிபோனாக இவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். ஆஹா..! என மகிழ்ச்சியில் துள்ளி எழுந்தான் போனை பற்றி ரிசீவரை எடுத்து டயல் செய்ய துணிந்தான்: அப்போதுதான் இவனுக்கு உதித்தது, அப்படியே போன் செய்தாலும் இவன் அழைத்ததும் வர இவனுக்கென்று யாருமில்லை. நண்பர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி எலும்பை முறிக்கும் அளவிற்கு அன்பை வளர்த்து வைத்திருந்தான். இவன் என்ன சொன்னாலும் அவர்கள் நம்ப போவதில்லை. உடன் பிறந்தது ஒரே அண்ணன், சென்ற மாதம் திருட்டு கேஸில் உள்ளே சென்ற அவனை, கொலை கேஸாக ப்ரொமாசன் கொடுத்து விட்டனர் காவல் துரை கணவான்கள். சே..!! நமக்கென்று உதவ இந்த உலகில் ஒருவன் கூட இல்லையே..! என நினைத்தான். தன் முடிவு இது தான் என்று நினைத்துக் கொண்டான். ஒரு மூலையில் சென்று அமர்ந்தான். அவன் கண்ணை கண்ணீர் நனைத்தது. அந்த இரவு மறுபடியும் அமைதியானது. சட்டென நிமிர்ந்தான், கண்ணீரை துடைத்தான். தான் அழைத்தாலும் வர ஆள் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி அவன் கண்ணில் தெரிந்தது. போனை எடுத்து நம்பரை தட்டினான். சில நொடிகளில் மருமுனை கரகரத்தது. தன் குரலை சரிசெய்து கொண்டு பேசினான்," ஐயா.. போலீஸ் டேசனுங்களா.. , நான் திருடன் பேசரேன்" .