2. யாருக்கு யார் சொந்தம்

3.1K 98 15
                                    

*யாருக்கு யார் சொந்தம் - 2*

சாருமதி அலுவலகத்தினுள் நுழைந்தபோது நல்லவேளையாக அந்த புதிய முதலாளி வந்திருக்கவில்லை. அவளது இருக்கையில் ஆசுவாசமாய் சாய்ந்து அமர்ந்து பணியை கவனிக்கலானாள்.

சில கணங்கள் சென்றதும்..
முன்னறையில் சிறு பரபரப்புத் தெரிய வாசலை பார்த்தவளுக்கு ஆத்திரமும் அதிர்ச்சியும் ஒருசேர உண்டாக மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள். அதுகூட தாமோதரன் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காகத்தான். மற்றபடி இவனுக்கெல்லாம் யார் மரியாதை தருவார்கள்? மற்றவர்களும் எழுந்து நிற்க அப்போதுதான் சூழ்நிலையை உணர்ந்தவளாக, உள்ளே குமுறியதை அடக்க முயன்றபடி முகத்தோற்றத்தை சீர் செய்தவள் அவசரமாக விழிகளை தழைத்துக்கொண்டு கொண்டாள் சாரு.

அவனைக் கண்டதில் ஆத்திரம் ஒருபுறம், அவனது ஊனமுற்ற கால்களைப் பார்த்ததில் அதிர்ச்சி மறுபுறம். கோல் ஊன்றிய நிலையிலும் கூட அவனது கம்பீரமும் அழகும் குறையவில்லை. அதுகூட சாருமதிக்கு பணத்திமிர் என்று தான் தோன்றியது. இவன் கீழே வேலை செய்வதா? எப்படி முடியும்? அவள் மனதோடு போராடிக் கொண்டிருக்கையில்  தாமோதரனோடு அவன் அவளை சமீபித்துவிட  சுதாரித்தாள் சாரு.

அவன் விழிகள் அவள் முகத்திலேயே கூர்மையுடன் பதிந்து இருக்க, தாமோதரன், அவளை அவனுக்கு அறிமுகப்படுத்தினார். "இவள் சாருமதி, என் காரியதரிசி, நல்ல சுறுசுறுப்பு வேலையில் கெட்டிக்காரி" என்றதும் அவன் புருவங்கள் யோசனையுடன் நெளிந்தது. சாரு, வலுவில் வரவழைத்த புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தாள்.

அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்.  அவளுக்கு பதில் வணக்கம் சொல்லாமல், சட்டென்று தாமோதரன் புறமாக திரும்பி " மன்னிக்கனும் சார் நான் கொஞ்சம் அவசர வேலையாய் போக வேண்டியிருக்கிறது" என்று விடைபெற்றுக் கொண்டு வேக
நடையுடன் வெளியேறினான். ஆம் ஊனமான கால்களால் முடிந்த அளவு வேகமாகத்தான் சென்றான்.

சாருவிற்கு ஆத்திரம் வந்தது அத்தனை அலட்சியமா? போகட்டுமே என்று அலட்சியமாக எண்ணி விட்டுவிட முடியாதே இந்த வேலை இல்லாவிட்டால் வேறு வேலை இதே சம்பளத்துடன் கிடைக்காதே! ஆனாலும் அவனது உதாசீனம் அவளை வெகுவாக பாதித்தது. அவளுக்கும் அவளின் சின்ன மகளுக்கும் வாழ்வாதாரமே இந்த வேலைதானே? எல்லாமும் சகித்துத்தான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. அவள் மனதோடு போராடினாள்.

தாமோதரன் அவள் தப்பாக எண்ணுவதாக நினைத்து, "நீ எதுவும் அவரை தப்பா நினைக்காதேம்மா சாரு, மிஸ்டர் சித்ரஞ்சன் நல்ல பையன்தான். நல்ல திறமைசாலியும்,ஏதோ அவசரம் கிளம்பிவிட்டார்"என்று சொல்லவும்

"பரவாயில்லை அங்கிள், இனி இங்கே தானே பொறுப்பில் வரப்போகிறார். மெல்லத் தெரிந்து கொள்ளட்டுமே!" என்று வலியை மறைத்து புன்னகைத்தாள் சாரு.
*************************************
மதிய உணவு இடைவேளை வரை மனதை சமனப்படுத்த மிகுந்த சிரமப்பட்டாள் சாரு. சாப்பிட முடியாமல் கொணர்ந்த சாப்பாட்டை  கூட்டிப்
பெருக்கும் ஆயாவிடம் தந்துவிட்டாள். மனது நடந்து போனவற்றிலேயே நிலைத்திருந்தது. லீவ் போட்டுவிட்டு வீட்டிற்கு போகவும் மனம் வரவில்லை. அதனால் தன் கவனத்தை வேலையில் செலுத்தினாள். முனைந்து மனதை ஈடுபடுத்தி வெற்றியும் கண்டாள்.

மாலையில் வீடு திரும்பும் வழியில் மகளை சிற்றுண்டி சாப்பிட வைத்து சற்று நேரம் அருகிலிருந்த பூங்காவில் விளையாட வைத்து விட்டு வீட்டிற்கு அழைத்து வந்தாள். வழக்கமான பணிகளை இயந்திரமாய் முடித்து இரவு மகளை உண்ண வைத்து, கதை சொல்லி தூங்க செய்தபின் தானும் பெயருக்கு சாப்பிட்டு படுத்தாள். ஆனால் மனது மட்டும் தூங்கவிடாமல் அலைபாய்ந்தது. கண்ணில் பெருகிய நீரை தட்டிவிட்டு, தூக்கத்தில் சிரித்த குழந்தையின் முகத்தை பார்த்தவளுக்கு.... துக்கத்தில் தொண்டை அடைத்தது..! மறக்கத்தான் இத்தனை தூரம்  வந்ததே ! ஆனால் விதி?

தொடரும்.....

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது Where stories live. Discover now