3. யாருக்கு யார் சொந்தம்

2.8K 90 17
                                    

*யாருக்கு யார் சொந்தம் - 3*

அடையாறில் அந்த பெரிய பங்களாவினுள் வேகமாக கார் நுழைந்தது. போர்டிகோவில் சித்தரஞ்சன் இறங்கிக் கொள்ள காரை ஷெட்டிற்கு கொண்டு போனான் காரோட்டி.

மதிய சமையலை மேற்பார்வை பார்த்து முடித்துவிட்டு கூடத்திற்கு வந்த அன்னை கருணாகரி, சோர்வாய் அவனது  அறையினுள் நுழைந்த மகனைப் பார்த்தாள். பெற்ற மனம் சற்று பதறத்தான் செய்தது. ஆனால் அவனிடம் போய் இப்போது என்ன பேசினாலும் பிரயோசனமே இருக்காது என்று அறிந்திருந்ததால் மௌனமாக தனது அறையில் தஞ்சம் புகுந்தாள்.

சித்தரஞ்சன் குழப்பத்தில் இருந்தான். அவளைப் பார்த்ததும் எவ்வளவு ஆனந்தப் பட்டான். எங்கெல்லாம் தேடி அலைந்து கிடைக்காமல் போனபின் சூனியமாகிவிட்ட இந்த வாழ்வை கடனே என்றல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறான். மனதின் ஓரத்தில் புள்ளியாய் இருந்த ஒரு நம்பிக்கையும் கூட காரணம்.

இளம் பெண் என்பதால் ஊரறிய தேடமுடியாமல் அது ஒரு சங்கடம். யாருக்கேனும் மனைவியாகியிருந்தால் அதை கெடுத்துவிடக் கூடாது என்ற தவிப்பு. ரகசியமாய் தேடி தேடி அவன் களைத்திருந்த சமயத்தில் இதோ எதிரே அழியாத ஓவியமாய் வந்து நிற்கிறாள் . பார்த்த கணத்தில் தன்னை அடக்க வெகுவாய் சிரமப்பட்டான். ஆனால் தாமோதரன் அவளை சாருமதி என்று ஏன் அறிமுகம் செய்தார்? ஒருவேளை தாமோதரன் தான் தவறாக சொல்லிவிட்டாரா?

ஆனால்.. அவளும் அதை மறுக்கவில்லையே ?கண்ணில் மட்டும் கோபம்? கோபமேதான் இருந்தாலும் உதடுகளை சிரித்தாற் போல வைத்திருந்தாளே? அப்படி எனில் அவள்தானா??
சித்ரஞ்சனுக்கு உண்மை தெரியாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. ஆனால் அவள் தனியாக இருக்கிறாளா திருமணம் ஆகிவிட்டதா? எப்படி தெரிந்து கொள்வது?? அவள் படிப்பைக்கூட முடித்திருக்கவில்லை அப்போது! கல்லூரியில் கடைசி  வருடம் படித்துக் கொண்டல்லவா இருந்தாள்? அவன் யோசிக்கையில் ஒன்று நினைவிற்கு வந்தது. அலுவலகத்தில் எல்லாருடைய குறிப்பும் இருக்கும்.  அவளைப் பற்றியும் குறிப்பு இருக்கும். அக நாளை பார்த்துவிட வேண்டும். இன்று அங்கே மறுபடி போய் நிற்க அவனுக்கு விருப்பமில்லை.

ஆனால் மனதை பொத்தி வைக்க முடியாதே! வழக்கம் போல பழைய நினைவுகள் ஆக்கிரமித்துக் கொள்ள வெளியே வெறித்தான்.
***************************
ஆறு வருடங்களுக்கு முன்பு....
சித்ரஞ்சனுக்கு அப்போது 25வயது.
செல்வ செழிப்பில் வளர்ந்தவன். படிப்பிலும் நல்ல கெட்டிக்காரன்தான். பட்டப்படிப்பை முடித்தகையோடு  வெளிநாட்டில் மேல் படிப்பையும் முடித்துவிட்டு தந்தையின் நிறுவனத்தை நிர்வகிக்க ஆரம்பித்து அதில் ஒரே வருடத்தில் நல்ல லாபத்தையும் காட்டியிருந்த நேரம் அது. சித்ரஞ்சனுக்கு தம்பி ஒருவன் உண்டு. சகோதர்கள்  இருவரும்   இரு  துருவங்கள்தான். இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவும் மாட்டார்கள். சின்னவனால் பெரியவனுக்கு எப்போதுமே அவமானம்தான். ஆகவே  அவனிடம் இருந்து விலகியே இருப்பான்.

வீட்டில் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி தாயார் கருணாகரி தினமும் பத்து பெண்களின் படங்களை காட்டி கேட்டவண்ணம் இருந்தார் .  அவனுக்கு அப்போதைக்கு திருமண பந்தத்தில் புகுந்து கொள்ள விருப்பமில்லை. நிறுவனத்தை இன்னும் மேல  கொண்டு போக வேண்டும் இன்னாருடைய மகன் என்பது மாறி இன்னாருடைய அப்பா என்று பெயர் எடுக்க வேண்டும் என்று எண்ணினான். கருமமே கண்ணாயினார் போல வேலை வேலை என்றிருந்தான்

ஆனால் எந்த லட்சியமும் இல்லாது ஊரை சுத்திக் கொண்டிருந்தான் அடுத்தவன். அவனது சுதந்திரம் பாதிக்கும் என்று திருமணம் எல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லிவிட்டான். எப்போதுமே அவன் பெற்றோருக்கு அடங்கியதில்லை. மாதம் ஒரு தொகையை அவனது கணக்கில் போட்டுவிட்டு பெற்றவர் பிரபஞ்சன் விலகிக்கொண்டார். அவன் அதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.

அப்போதுதான் தூரத்து உறவில் ஒரு திருமணத்திற்கு அழைப்பு வந்தது. திருமணம் பெங்களூரில் நடக்க இருப்பதால், அந்த தட்பவெட்பம் தங்களுக்கு ஒத்துவராது என்று காரணம் தெரிவித்ததோடு அடுத்த தலைமுறையான அவன்தான் இனிமேல் இது போன்ற விசேஷங்களுக்கு போய்வர வேண்டும் என்று அழுத்தமாக சொல்லி  பெற்றோர் இருவரும் சித்ரஞ்சனை  வற்புறுத்தி அனுப்பி வைத்தனர்.
பெங்களூரில். ...??

தொடரும்....

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ