*யாருக்கு யார் சொந்தம் - 09*
மருத்துவமனையில் வைத்து எந்தப் பேச்சும் வேண்டாம் என்று சித்ரஞ்சன் எண்ணினான். சாருவுக்கும் அப்போதிருந்த மனநிலையில் அவனோடு தர்க்கம் பண்ண தெம்பு இல்லை. மகள் எழுந்து நடமாடினால் போதும் என்றிருந்தது.
சித்ரஞ்சன் அந்த குழந்தையின் முகத்திலேயே பார்வையை பதித்து இருந்தவன், சட்டென்று சாருவைப் பார்த்தான், அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். "என்ன என்பது போல நோக்கவும், "உன் கணவருக்கு தகவல் சொல்லிவிட்டாயா?" என்றான்
சாருவுக்கு ஒருகணம் அவனது கேள்வியே புரியவில்லை. அது புரிந்தபோது உள்ளூர பதறிய மனதை அடக்கிக்கொண்டு
"சொல்லவேண்டும். மெதுவாய்
சொல்லிக் கொள்ளலாம்," உயிரற்ற குரலில் கூறிவிட்டு பார்வையை விலக்கிக் கொண்டாள்."அதுவும் சரிதான் உடனே வந்துவிடப் போகிறாரா என்ன ?" என்றான் ஒருமாதிரிக் குரலில்!
திடுக்கிட்டு,"என்..என்ன சொல்றீங்க? என்றாள்.
"அவர்தான் வெளிநாட்டில் இருக்கிறாரே தகவல் சொன்னால் மட்டும் உடனே ஓடிவந்துவிட முடியுமா என்று சொல்ல வந்தேன்" என்றான் அதே குரலில்.
அவன் ஏதோ மறைமுகமாய் தாக்குவது போல என்ன அதேதான். ஆனால் எதையும் சிந்தித்துப் பதில் அளிக்க முடியாத நிலையில் அதற்கு மேலாக வாய்விட்டால் அவள் தான் மாட்டிக் கொள்ள நேரும். இப்போது அவளது மூளை சுத்தமாய் வேலை செய்யும் நிலையில் இல்லை. எதையாவது வார்த்தையாய் பிடிங்கி அதிலேயே மடக்கிவிடுவான் என்று மௌனமானாள்.
மஞ்சரியிடம் லேசாய் அசைவு தெரிய இருவரும் அவளருகில் சென்றனர். கண்ணை விழித்த குழந்தையின் தலையை மிருதுவாய் வருடினான் சித்ரஞ்சன். "அங்..கிள்.. நீங்க வந்துட்டீங்களா??" குழந்தையின் முகம் பிரகாசித்தது.
"ஆமாடா, என் ஏஞ்சல் கூப்பிட்டு வரமா இருப்பேனா?? அவன் குரல் மிக கனிவாக ஒலித்தது.
"கண்ணும்மா "கரகரத்த குரலில் அழைத்தாள். சாருவுக்கு குழந்தை கண்விழித்துப் பேசியதில் கண்கள் கலங்கிவிட்டது.
"ஷ்... சாரு, அடக்கிக் கொள் குழந்தை பயப்படப் போகிறாள்"
என்று அவளுக்கு மட்டுமாய் கேட்கும்படி எச்சரித்தான் சித்ரஞ்சன். அவளும் புரிந்து கொண்டு தன்னை சுதாரித்துக் கொண்டாள்."அங்கிள் இனிமே டெய்லி என்னைப் பார்க்க வருவீங்கள்ல?" அவளது கேள்விக்கு அவன் யோசிக்காமல் பதில் சொன்னான்.
"ஆமாடா செல்லம். இப்போதான் அம்மாவுக்கு நீ சொல்லிட்டியே! அதனால நீ டெய்லி அங்கிள் கூட கார்ல ரவுண்ட் போகலாம். ஹாலிடேஸ்ல பிக்னிக் போகலாம்."
குழந்தையோடு அவன் அன்யோன்னியமாய் பழகுவதைப் பார்த்த சாருவுக்கு ஏனோ எரிச்சலாக வந்தது. அவளிடம் அனுமதி கூட கேளாது அவன் பாட்டிற்கு திட்டம் வேறு போடுகிறானே? சின்னதும் தான் அவள் ஒருத்தி இருப்பதையே மறந்து அவன் சொல்வதை கண்கள் மலர அதிசயமே உருவாகப் பார்த்திருக்கிறதே!
இதை இப்படியே தொடர விடக்கூடாது. அவனுக்கு இதெல்லாம் ஒன்றுமில்லாததாக இருக்கலாம். ஆனால் அவளுக்கு? அவன் சொல்வது போல எல்லாம் நடக்க ஆரம்பித்தால் அவளது வாழ்க்கை அல்லவா பாதிக்கும்? அவள் குறுக்கிடாமல் யோசனையிலேயே ஆழ்ந்திருக்க குழந்தையிடம் பேசியவாறே அவளிடமும் ஒரு கண்ணை வைத்திருந்த சித்ரஞ்சனின் புருவம் யோசனையில் நெளிந்தது.
ஆனால் எதையும் சின்ன குழந்தையை வைத்துக் கொண்டு பேச அவனுக்கு விருப்பமில்லை என்றாலும் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்துவிட்டதாக உணர்ந்தான்.
*******************
மருத்துவமனையிலிருந்து சாரு, பிடிவாதமாய் மகளுடன் ஆட்டோவில் வீடு திரும்பினாள். மருத்துவ செலவிற்கான பில்லை அவன் ஏற்கனவே கட்டிவிட்டிருக்க அதை கொடுக்க முயன்றபோது, அது தன்னால் ஏற்பட்ட சுகக் கேடு அதற்கு அவன் தருவதுதான் நியாயம் என்றுவிட்டான்.வீடு வந்தபிறகும் அவன் கைபேசியில் குழந்தையிடம் ஏதேதோ சொல்லி சிரிக்க வைத்தான். சாப்பிடக்கூட அவன் சொல்லித்தான் சாப்பிட்டாள். சாருவிற்கு இத்தனைநாள் இரவு பகல் பாராது பார்த்து பார்த்து வளர்த்த மகள் இப்படி மாறிப் போனதில் கவலை உண்டானது. என்ன மாயம் இது? ஒரு வேளை இதுதான் யதார்த்தமா? அவளுக்கு அதை ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தது.
மறுநாள்...
மகளுக்கும் தனக்கும் லீவு சொல்லிவிட்டு சாரு இரவு பெங்களூர் பயணமானாள்.தொடரும்....
DU LIEST GERADE
யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது
Aktuelle Literaturஇது எனது இரண்டாவது கதை. நாயகி சாரு, நாயகன் சித்ரஞ்சன் சந்தர்ப்பவசத்தால் பிரிந்து விடுகிறார்கள். மீண்டும் அவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறார்கள். அப்போது நாயகி கையில் குழந்தை. எப்படி? தெரிந்து கொள்ள மேலே படியுங்கள் ...