தனது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்தான் சாய் கிருஷ்ணா ..அது தெரியாத எண்ணில் இருந்து வந்திருந்தது.. யாரோ என்று நினைத்து அதனை புறம் தள்ளப்போக மனதில் ஏதோ ஒன்று தோன்றவே அதன் உள்ளே சென்று பார்த்தான்.
" உனக்கு உன் மனைவி தேவையென்றால் யாரிடமும் சொல்லாமல் தனியாக நான் சொல்லும் இடத்திற்கு வா.."
என்று இருந்தது அதில்...
என்ன இது என்று முதலில் யோசனை செய்தவன் பின் உடனே நிரோஷினியின் தொலைபேசிக்கு அழைத்தான் ...ஆனால் அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்றே வந்தது.. கோபம் தலைக்கேற அவனது ஆள் ஒருவனுக்கு அழைத்து ராகுலை பற்றி கேட்டான். ஆனால் ராகுல் சாய் கிருஷ்ணாவின் தொல்லை தாங்காமல் அமைதியாக இருப்பதாக பதில் வந்தது அவனிடமிருந்து ..
அன்று ராகுல் நிரோஷினியை கார் வைத்து மோதியதில் இருந்து அவருக்கு தொல்லை மேல் தொல்லைக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவரை தினமும் பின்தொடர ஆள் வைத்து இருந்தான். அதனால் அவர் இல்லை என்பது உறுதியாகி விட வேறு யாராக இருக்கும் என யோசனை செய்தவனுக்கு யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை..
உண்மையில் அவளுக்கு ஆபத்து என்று நினைக்கையில் உள்ளம் பதறியது அவனுக்கு ...இப்போது அவனுடைய எல்லாமே அவள் ஆகிப் போனாள் அல்லவா... அதன் விளைவே இந்த பதட்டம்.. இப்படியே யோசனை செய்து கொண்டு இருந்தால் சரியாகாது என்று உணர்ந்தவன் வேறு ஒரு எண்ணிலிருந்து ராமுக்கு அழைத்து அனைத்தினையும் கூறியவன் சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு குறுஞ்செய்தி வந்த எண்ணிற்கு அழைத்தான்..
ஆனால் அந்த அழைப்பு உடனே துண்டிக்கப்பட்டது ...அடுத்த நொடியே அந்த எண்ணில் இருந்து மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது அவனுக்கு.. அதில் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு வரும்படி கூறி இருந்தது... அவனுக்கு அவனுடைய மனைவி முக்கியம் ...அதனால் அந்த இடத்திற்கு தனியாக செல்ல முடிவெடுத்தான் ...அதற்கு முன் அவனது மாமனாருக்கு அழைத்து தர்ஷினியின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டான் அவன்..