மதுரை ,
அன்று சுபத்ராவின் திருமண வரவேற்பு . சஞ்ஜீவ் அன்று காலையில் தான் வந்து இறங்கி இருந்தான் . அவனுடன் சக்தியும் வந்திருக்க மேகாவும் அதுல்யாவும் அன்று காலை கிளம்பி மதியம் வந்து சேர்ந்திருந்தனர் . அந்த கல்யாண மண்டபம் முழுவதும் அழகிய மின்விளக்குகளின் ஒளியில் தகதகக்க அதற்கு குறையாத பொலிவுடன் அந்த நட்சித்திரங்களுடன் போட்டியிடும் வண்ணம் உற்றாரும் சுற்றத்தாரும் குழுமி இருந்தனர் அந்த மண்டபத்தில் .
சஞ்ஜீவுடன் சக்தி இணைந்து வந்தவர்களை வரவேற்பது , பந்தியை கவனிப்பது என்று அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தான் . திடீரென்று யாரோ உற்று கவனிப்பதை போல் ஒரு எண்ணம் தோன்ற அந்த உணர்வு எழுந்த திசையை கண்டவன் கண்ணில் விழுந்ததென்னவோ அவள் தந்தையின் பின் அதுல்யாவுடன் அழகிய கரும்பச்சை வண்ண அனார்கலியை உடுத்தியபடி அவனை உறுத்து விழித்தபடி வந்த மேகாவை தான் . அவளின் உருவத்தை 1௦ நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்து முடித்தவன் முகத்தை அந்தப்புறம் திருப்பிக்கொள்ள மேகாவோ அவன் செயலில் எழுந்த விரக்தி சிரிப்புடன் அதுல்யாவின் புறம் தன் கவனத்தை திருப்பிக்கொண்டாள்.
சஞ்ஜீவ் வந்தவர்களை உபசரித்துக்கொண்டிருந்தவன் பார்வை வாயிலிற்கு செல்ல அவன் கண்களிற்கு விருந்தென அமைந்தாள் எளிமையான aquamarine வண்ணத்திலான அனார்கலியை அணிந்திருந்த அதுல்யா . அவனின் பார்வை தன்மேல் விழுவதை உணர்ந்தவள் எப்படி இருக்கிறதென்ற ஜாடையில் வினவ அவனோ ஒற்றை புருவத்தை உயர்த்தி கன்னக்குழி தெரிய ஒரு மெச்சுதல் சிரிப்பை கொடுக்க அவளோ அவன் அதே நிற சட்டையிலும் சந்தன நிற கால்சராயிலும் இருப்பதை கண்டு சூப்பர் என்று ஜாடை காண்பித்தாள் .
சஞ்ஜீவ் மேகாவின் தந்தையை வரவேற்க சென்றவன் " வாங்க அங்கிள் ... எப்படி இருக்கீங்க ?" என்று பேச்சு அவரிடம் இருந்தாலும் பார்வை அதுல்யாவிடம் இருக்க
அவரோ " நல்லா இருக்கேன் சஞ்ஜீவ் . ஒரு வழியா தங்கச்சி கல்யாணத்த நல்லபடியா நடத்த போற. ரொம்ப சந்தோஷம் பா . foreign போக போறதா மேகா சொன்னா. சம்பாதிச்சதை உனக்குன்னு இனி சேர்க்கப்பாரு . எந்த உதவினாலும் என்கிட்டே கேளு. " என்று கூற