அன்றைய இரவு துரிதமாகவே முடிந்துவிட திருமணம் காலை ஏழு மணி அளவில் கார்த்திக்கின் வழக்கப்படி கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெறவிருந்தது . பெண்வீட்டார் ஆறுமணிக்கே கிளம்பி கோயிலிற்கு சென்றுவிட அங்கே நெருங்கிய சொந்தங்களும் ஒரு சில நண்பர்களும் மட்டுமே வருகை தந்திருந்தனர் அதில் அதுல்யா மற்றும் மேகாவும் அடக்கம் . சஞ்ஜீவ் ஒரு வித நெகிழ்ச்சியில் நின்றுகொண்டிருந்தான் . அவனின் தங்கை என்று இவ்வளவு பெரியவளானாள்? சிறு வயது தொட்டு அவன் கல்லூரி முடிக்கும் வரை அவர்களின் நெருக்கம் அலாதியானது தான் . அதன் பின் அவன் வேலைக்கு சென்றதும் ஏனோ அவள் அவனிடமிருந்து ஒதுங்கவும் அவனை ஏளனப்படுத்தவும் துவங்கி இருந்தாள் .... அதற்கு அவளின் தந்தையும் ஒரு பெரிய காரணமாவார் . அவனிற்கு கண்கள் கலங்கி கண்ணீர் இப்பொழுதோ எப்பொழுதோ விழுந்துவிடுவேன் என்பது போல் இருந்தது அவளை அவள் தந்தை தாரைவார்க்கும் பொழுது .
சுபத்ராவிற்கு இடைப்பட்ட காலத்தில் சஞ்ஜீவ் அவளால் வெளிநாடு செல்வது எப்படி எப்படியோ சென்றிருக்க வேண்டிய வாழ்வு அவனால் அங்கீகரிக்கப்படுவது புதைந்திருந்த பாசத்தையும் உரிமை உணர்வையும் தட்டி எழுப்பி இருந்தது . என் அண்ணன் எனக்காக எதுவும் செய்வான் என்ற மமதையையும் அதிகமாகவே தந்திருந்தது என்று கூறலாம் . மங்கலநாணை அணிவிக்கும் நேரம் வர அவளின் விழிகளோ கண்ணீர் திரையிட காதலனையும் அதன் பின் அவளின் அண்ணனையும் நோக்கியது நன்றியுடன் . அவனோ அந்த நிகழ்வில் பூக்களை அட்சதையுடன் தூவியவன் கண்களில் இருந்து சரேலென்று இறங்கியது கண்ணீர் .
அவனை அவதானித்துக்கொண்டே இருந்த அதுல்யா கூட்டத்தில் அவனின் பின் சென்று நின்றவள் அவனின் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொள்ள அவனோ அவளின் கரத்தை திரும்பாமலே உணர்ந்தவன் அதில் மேலும் அழுத்தம் கொடுத்து தன் உணர்வுகளை அவளிடத்தில் கடத்திக்கொண்டிருந்தான் .
ஒரு நிமிடம் கரங்களை பிடித்திருந்தவள் மேலும் யாரும் பார்க்கும் முன் கைகளை விடுவித்துக்கொண்டனர் . திருமண முடிந்து ஸ்வாமி தரிசனம் செய்தவர்கள் உறவினர்களை ஒரு வண்டியில் மாப்பிள்ளை வீட்டிற்கு முதலில் அனுப்பி விட்டு சக்தி மற்றும் சஞ்ஜீவ் இருசக்கர வண்டியில் பின்தொடர்வதாக இருந்தது . உறவினர்களின் கூட்டம் மறைந்த பின் சஞ்ஜீவ் தனது இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் நோக்கி அதுல்யாவிடம் கண்ணை காட்டிவிட்டு செல்ல அதுல்யாவும் அவன் பின்னே சென்றாள். சக்தியோ மேகாவையே அவதானித்துக்கொண்டிருந்தான் அவளின் பார்வை தவறி கூட அவன் புறம் திரும்பவில்லை . அவனோ அவளிடம் பேசலாமா வேண்டாமா என்று இருமனதுடன் அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தான் .