சரியாக ஒரு மாதம் கழித்து காலை சென்னை விமான நிலையம் அதற்குரிய பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்க அந்த விமான நிலையத்திலிருந்து கையில் தனது உடமைகள் நிறைந்த பெட்டியுடனும் கண்ணில் எதையோ எதிர்பார்த்து அதை நடத்திக்காட்டும் தீவிரத்துடனும் வந்து இறங்கினான் சஞ்சீவ் . இன்றுடன் அவன் இந்த சென்னை மண்ணை விட்டு சென்று மூன்று ஆண்டுகள் ஆகி இருந்தது . அவனிற்காக பதிவு செய்திருந்த வாகனம் வந்து விட தனது உடமைகளை பின்னிருக்கையில் வைத்தவன் வாகன ஓட்டியை நோக்கி ஒரு சிறிய சிரிப்பை உதிர்த்து விட்டு முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான் .
அந்த வாகன ஓட்டி அவனிடம் ஸ்னேஹமாக சிரிப்பை உதித்தவர் " சென்னைக்கு வேலை விஷயமா வந்துருக்கீங்களா சார் ?"
என்று கேட்க தனது கைபேசியில் அதுவரை கவனத்தை வைத்திருந்த அவனும் " ஆமா "
வாகன ஓட்டி " சொந்த ஊரு நமக்கு சென்னை தானா?"
சஞ்சீவ் " இல்லைங்க சொந்த ஊரு மதுரை ஆனா படிச்சது மொதல்ல வேலை பார்த்தது எல்லாமே சென்னை தான்.அப்பறோம் மதுரைல இருந்தேன் 3 வருஷம் அமெரிக்கால ப்ராஜெக்ட் பண்ண போயிருந்தேன் இப்போ தான் திரும்ப வரேன் "
என்று கூறஅதை புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தவர் " ஊருக்கு போகலைங்களா இங்க வந்துடீங்க "
சஞ்சீவ் ஒரு கசப்பான புன்னகையை சிந்தியவன் " என்னோட தேவை இனி அங்க இல்ல " என்று வெளியில் பார்க்க துவங்கி விட வாகன ஓட்டியும் அதற்கு மேல் ஏதும் கேட்காமல் வாகனத்தை ஓட்ட வாகனத்தில் பூங்காற்றிலே உன் சுவாசத்தை என்ற பாடல் மனம் கொண்ட ரணத்தை மேலும் கீறி விடுவதாய் இருந்தது .
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உன்னை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வாஅவன் பார்வையை வெளியிலேயே பதிந்திருக்க அப்பொழுது அவனது வாகனத்தை தாண்டி ஒரு இருசக்கர வாகனம் சென்றது . கணநேரம் என்றாலும் உயிரில் உறைந்தவளின் தரிசனம் அல்லவா மனதும் மூளையும் செயலிழக்க ஸ்தம்பித்து ஒரு கணம் நின்றவன் அந்த வாகனத்தை பார்க்க போக்கு வரத்து நெரிசலில் சிக்கியதாலோ என்னவோ அவன் இருந்த மகிழுந்துக்கு முன்பு தான் நின்றிருந்தாள் .
அவளது நீண்ட கூந்தல் இன்றும் அவனது இதழில் ஒரு புன்னகையை தவழவிட்டது. அவனது ஆசைக்காக அவள் வளர்த்ததல்லவா. அது தந்த உவகையில் இதழ்கள் விரிய புன்னகைத்தவன் அவள் வாகனம் கண்கள் தாண்டி மறைந்து புள்ளியாகும் வரை பார்த்தபடி இருந்தான் .