தன்னை இழுத்தது யாரென்று பார்க்குமுன்பே மதுவின் நெடி பயங்கரமாக வீசியது.அறுவெருப்போடு அவனது முகத்தைப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்...
" டேய் என்னாச்சுடா.. எதுக்குடா இந்தக் கெட்ட பழக்கம் " என்று அதட்டினாள்..
" நான் கு.டி.க்.கல... நான் ஆரஞ்சு " என்று வார்த்தையை முடிக்கமுடியாமல் அவள் மீதே மயங்கி விழுந்தான்.. சந்துரு
இந்த நிலையில் இவனை இவர்கள் வீட்டார் யாராவது பார்த்தால் என்ன ஆகும் என்று நினைக்கும்போதே சென்றமுறை இவன் குடித்துவிட்டு வந்தபோது அவனை வீட்டை விட்டு துரத்திவிடுவேன் என்று மல்லிகா மிரட்டியது நினைவு வரஅவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அருகிலுள்ள கோயில் மண்டபத்தில் அமரவைத்தாள்..குடத்தில் சிறிது தண்ணீரை எடுத்துவந்து அவனது முகத்திலே ஊற்றினாள்..அப்போதும் அவன் எழுந்தபாடில்லை..
அவனோ " நான் ஆகாஸ சும்மாவிட மாட்டேன்.. அனுவ நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் .. அனுவுக்கு அவனோட நாளைக்கு நிச்சயமா" என்று வாயிக்குள் எதையோ புலம்பிக் கொண்டிருந்தான்.
விடியும் நேரமானதால் மக்கள் நடமாடத் துவங்கினர். இதற்கு மேல் இங்கிருந்தால் ஊரார் முன் தன் நண்பன் அவமானப்பட நேரிடும் என்று எண்ணி பிரசாந்திற்கு அழைத்தாள். அவனின் அலைபேசி சுவிட்ச் ஆஃப் என்று வந்ததால் ஆகாஷிற்கு வேறு வழியின்றி அழைத்தாள்..
அவன் வந்து காரில் சந்துருவை அள்ளிக் கொண்டு சென்றான்..
9 மணிக்கு சந்துருவிற்கு மயக்கம் தெளிய, அவன் முன்னே மொத்த குடும்பமும் முறைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து பதறியடித்துக் கொண்டு எழுந்தான்.
நேற்று கூத்து பார்த்துக் கொண்டிருந்தவன் எப்படி இங்கு வந்தான் என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை... தலை கின்னென்று வலித்தது.. ஆகாஷ் சட்டைக் கிழிய, வாயில் இரத்தத்துடன் நின்றிருந்தான்..
" மா என்னாச்சு " என்று அவன் பேசிமுடிக்கும் முன்னரே ஓங்கி அவன் கன்னத்தில் அறையினைப் பதித்தார் மல்லிகா..