சாதனா மற்றும் பிரசாந்தின் நடவடிக்கைகளை குடும்பத்தினர் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.. திருமணத்திற்கு முன்னே சண்டைக் கோழிகளாக சிலுப்பிக் கொண்டிருக்கும் இவர்கள் திருமணத்திற்குப் பின் என்ன செய்வார்களோ என்ற பயம் அனைவரையும் தொற்றிக் கொண்டது..
அதிலும் கமலாவிற்கு சொல்லவேத் தேவையில்லை... சாதனாவின் நடவடிக்கை அவருக்குமே பிடிக்கவில்லை தான். இங்கு இவ்வாறு இருக்க, திருமண நாள் நெருங்கிக் கொண்டே போனது..இன்னும் இருபது நாட்களில் திருமணம் என்றானது..
இதற்கிடையில் சாதனாவின் நிலையைக் குறித்து ஆய்வு செய்த சந்துரு அவளுக்கு குரல் வருவதற்காக வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களிடம் உதவிக் கேட்டுக் கொண்டிருந்தான்..அவர்களும் அதற்கு 40% வாய்ப்பிருப்பதாக கூறியிருந்தனர்.. அதன்படி அவளுக்கு சிகிச்சையும் நடந்து கொண்டிருந்தது. திருமணத்திற்காக அதிதியும் வந்திருந்தாள் அவன் அழையாமலே..
அதிதியைக் கண்டதும் தாயினைக் கண்ட சேயாய் அவன் தோள்சாய்ந்து தனது மனக்குறைகளை எடுத்துக் கூறினான் பிரசாந்த்..
" நான் என்ன பண்ணேனு எனக்கேத் தெரிலடி.. பேசாம எங்காச்சும் ஓடிப் போயிரலாம் போல தோணுது.. அவ என்ன பிரச்சினைனு சொன்னாக்கூட பரவாலைடி.. " என்று தன்பாட்டுக்கு புலம்பிக் கொண்டே இருந்தான்..அவளும் அவனுக்கு ஆறுதலாக சிலவற்றை எடுத்துக் கூறியும் மனம் தேறாதவன் இறுதியில் அவள் கூறிய ஆலோசனையில் தேறினான்..அது என்னவென்றால் ஆகாஷை சிறையிலிருந்து வெளியே எடுத்தால் அவளது கோபம் ஒரு வகையில் குறையுமோ என்பது தான்..
இது நல்ல யோசனையாக இருந்தாலும் சாதனாவைக் கேவலப் படுத்திய அவனை மன்னிக்க இயலவில்லை..அதிதியே தனது சித்தப்பாவான கமிஷனரிடம் பேசி சம்மதிக்க வைத்து உடனே ஆளுநருக்கும் அவர் மூலமாகவே மனுவொன்றை ஆகாஷின் பெற்றோர் சார்பாக அனுப்பி வைத்தாள்.அதன்படி எண்ணி ஒரு வாரத்தில் ஆகாஷ் வெளியே வந்தான்.
வந்தவன் நேராக சாதனாவைத் தான் பார்க்க வந்தான். இருப்பினும் சாதனா அவனைப் பார்க்க மறுத்து விட்டாள்..