பிரசாந்திற்கு நடப்பதெலாம் கனவெனத் தோன்றியது.. நீண்ட நாட்களுக்குப் பிறகு அனு சந்துருவுடன் சிரித்துப் பேசிக் கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அதை யாரும் கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். சந்துருவின் சிரித்த முகம் அவன் அனுவை மன்னித்து விட்டான் என்று கூறியது..
இன்று கம்பெனியில் முக்கியமான மீட்டிங் இருந்ததால் அதற்கு தயார் செய்து கொண்டிருந்தவனை அதிதியின் செருமல் சத்தம் நிஜஉலகத்திற்கு கொண்டு வந்தது..
அவள் கையில் கொண்டு வந்த லக்கேஜ் அவள் வீட்டை விட்டு செல்கிறாள் என்று தெளிவாக எடுத்துக் கூறியது.. அவள் கண்களில் இருக்கும் கண்ணீர்த் துளிகளை அவள் மறைக்க முயற்சித்தாலும் அவன் கண்டுகொண்டான்.
" அதிதி என்னாச்சு.. எதுக்கு இப்ப அழுகுற.. " என்று அவன் பதறியடித்துக் கொண்டு எழுந்து அவள் அருகே சென்று கேட்டான்.. " ஏ லூசு எனக்கு எதுமில்ல.. இன்னும் எத்தனை நாள் தான் இங்கேயே இருக்கறது.. நான் வந்த வேலையும் முடிஞ்சிருச்சுல. ஃபீல் பண்ணாத.. உங்க கல்யாணத்துக்கு நீ கூப்பிடினாலும் வந்து விடுவேன்.." என்று அதிதி சிரித்துக் கொண்டே சமாளித்தாலும் அவளது குரல் அதனை சோகமாகவே வெளிக்காட்டியது..
" இன்னும் கொஞ்ச நாள் " என அவனிழுக்கவும் " இல்லடா.. அப்பா அங்க தனியா கஷ்டப்படறாங்க.. போய் தான் ஆகனும்.. " என்றாள். " ஆனா ஏன் அழுகுற அதிதி .. யாராவது எதும் சொன்னாங்களா " என்ற அவனது கேள்விக்கு " ச்சீச்சி அப்படிலாம் எதுவுமில்லடா.. உன்னை..., இந்தக் குடும்பத்தை விட்டுப் போக ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. அவ்ளோ தான்.. சரி சரி .. ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு.. சும்மா இங்கேயே வெட்டியா இருக்காம சாதனாவ கரெக்ட் பண்ற வேலையையும் பாருடா .. டேக் கேர் " என்று கூறி விட்டுச் சென்றாள்.
இதற்கு மேல் இருந்தால் எப்படியும் வெடித்து அழுது விடுவோம் என அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள். அவள் சென்றது தனது பாதிபலம் இழந்ததைப் போல உணர்ந்தான்.என்ன தான் அவனது குடும்பம் அவனிடம் சகஜமாகப் பழகினாலும் மீண்டும் எதாவது சந்தர்ப்பத்தில் தன் அன்பை மீண்டும் அவமானப்படுத்தி விடுவார்களோ எனப் பயந்தான். அதனால் சற்று தள்ளியே நின்றான்.அவனுக்கு உறுதுணையாக இருந்தது அதிதி மட்டுமே.. இப்போது அவளும் செல்கிறாள் என்றவுடன் வெறுமையை உணர்நதான்.
இங்கே அவர்கள் என்றால் அங்கோ சாதனா.. அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.. தன்னைப் பற்றி யாராவது தவறாகக் கூறியிருப்பார்களோ அதனால்தான் அவ்வாறு நடந்து கொள்கிறாளோ.. என்று தனக்குள்ளே எண்ணியவாரே வீட்டை விட்டு வெளியே வந்தான்.