கோதை இல்லம்...
மாளிகை போன்ற வீட்டின் கேட்டின் அருகில் ஒரு பெரிய பலகையில் கோதை இல்லம் என்ற பெயர் வீற்று இருந்தது. வீட்டினைச் சுற்றிலும் கோட்டைச் சுவரும் அதன் நுனியில் கண்ணாடிச் சில்கள் பொருத்தப்பட்டும் இருந்தது. கோட்டைக்கு அருகில் தென்னை, வேம்பு, மாதுளை, நெல்லி, பப்பாளி, வாழை, மா எனப் பல மரங்களும் வரிசையாக பாத்தி கட்டியது போன்று பலப் பூச்செடிகளும் நிறைந்து காணப்பட்டது. வீட்டின் வாசலுக்கும் கேட்டிற்கும் இடையில் வட்ட வடிவில் தொட்டி அமைக்கப்பட்டு அதில் ஒரு பெண் கையில் குடம் கொண்டு பிள்ளையாருக்கு நீர் ஊற்றுமாறு ஒரு சிலையும் குடத்திலிருந்து நீர் ஊற்றிக் கொண்டு இருக்குமாறும் செட் செய்து இருந்தனர். பிள்ளையாரிடம் இருந்து வரும் நீர் அனைத்துப் பூச்செடிகளுக்கும் செல்லுமாரு அமைக்கப் பட்டும் இருந்தது. வீட்டின் இடது புறம் காரினை நிறுத்த செட்டும் இருந்தது. வீட்டின் அமைப்பும் மிக அழகாகப் பார்ப்போரைக் கவரும் வண்ணம் இருந்தது.
கணியன் மற்றும் கோதை இருவருக்கும் காதல் திருமணம். வீட்டினை எதிர்த்து நடந்தது என்பதால் சொல்லிக் கொள்ளும்படி சொந்தம் யாரும் இல்லை. அவர்கள் ஒன்றும் இல்லாமல் சென்னை வந்து சேர்ந்தனர். கணியனின் முழு உழைப்பின் காரணமாய் ஐந்து வருடத்தில் பெரிய ஹோட்டெல் ஆரம்பித்து நல்லபடியாக்ச் சென்றது. அதன் பலனாய் தனது அன்பு மனைவிக்குப் பரிசாய் இந்த மாளிகை போன்ற வீட்டினையும் கட்டி முடித்தார். வீட்டினக் கட்ட பல லட்சங்கள் ஆக அதற்கு கடன் பெற்று ஒரு வழியாய் வீட்டினைக் கட்டி முடித்தார். அப்பொழுது அவருக்கு அமுதனும் அதன் பின் பரணியும் பிறந்தனர். பெண் குழந்தை வேண்டும் என்ற தவத்தின் பலனாய் சுமி பரணிக்குப் பின் இரண்டு வருடத்தில் பிறந்தாள். அமுதனுக்கு பத்து வயது எனும் பொழுது ரயில் விபத்தில் பெற்றோர் இழந்தவன் ஏதும் அறியாத அந்த வயதிலும் தன் உடன்பிறப்பினை நல்ல முறையிலேயே வளர்த்தான். தந்தை வாங்கிய கடன் அனைத்தையும் தான் திருப்பித் தருவதாகக் கூறியவன் வீட்டின் பத்திரத்தினை அடகு வைத்து கடன்கள் அனைத்தையும் கட்டி முடித்து தன் படிப்பையும் நிறுத்தாமல் அமுதனும் பரணியும் கல்லூரிப் படிப்பை முடித்தனர். அதிலும் மூவரும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினர். சங்கர் தேவன் அமுதனுடனே இருந்து அனைத்து நல்லது கெட்டது அனைத்திற்கும் உதவினார். சங்கர் உதவியால் தான் வேதாவின் தந்தையான கனகராஜிடம் வீட்டினை அடகு வைத்து பணம் பெற்றான். இப்படி பல படிகளைக் கடந்து இன்று மிகப் பெரும் பணக் காரர்களில் ஒருவனாகத் திகழ்கிறான்.