அதிகாலை எழுந்த ரம்யா வீட்டின் அனைத்து வேலைகளினையும் முடித்து யுவாவிற்கு தேநீர் கொடுத்துப் பின் வேதாவின் அறைக்குச் செல்ல, வேதா அங்கில்லை. எங்கு சென்றான் என அறையினை சுற்றி வலம் வந்தவள் கண்டது.. வேதா, அறையுனுள் இருக்கும் குட்டியானத் தனிப்பட்ட அறையில் கையில் ஃபைலும் காதில் இயர்போனுமாய் தீவிரமாய் யாருடனோ உரையாடிக் கொண்டு இருந்தான். அவனின் உரையாடலில் கவனம் செலுத்தாமல் தேநீர் கப்பினை டம்மென மேஜையில் வைக்க.. சப்தம் கேட்ட வேதா அவளினை நோக்கி வேகமாக காலினை கட் செய்தபடி வந்தான்.. வந்தவன் புது மணப்பெண்ணாக கழுத்தில் தொங்கும் மாங்கல்யம் தலையில் சூடிய ஒற்றை செந்நிற ரோஜா என அழகாக மிளிர.. ஏதோ ஒன்று குறைவாய் படவும் ஆழ்ந்து பார்த்தான். அவனின் பார்வைகளினைப் பார்த்துக் கொண்டே இருந்தவள் ஆழ்ந்து பார்க்கவும் விழிகளினை சந்திக்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்.
எதனையோ அறிந்துவிட்ட பாவனையில் முகத்தினை மாற்றியவன் அவளின் வலது கரத்தின் விரல்களினைப் பற்றியவாறு கீழே இழுத்துச் சென்றான். அவனின் இழுப்பிற்கு ஓடியவள் என்ன செய்கிறான் என அறியும் முன்னரே பூஜை அறையில் இருந்த குங்குமத்தினை பெருவிரலும் நடுவிரலும் சேர்ந்தபடி எடுத்து அவளது நுதலில் பொறுத்தியவன் மார்பினில் தொங்கிய தாலியினை கையில் எடுத்து அதிலும் திலகமிட்டான். ரம்யா அதுவரையிலும் ஒரு மாய லோகத்தில் இருந்தபடி இருந்துவிட்டு தாலியில் திலகமிட்டது கொண்ட உணர்வில் இம்மியும் இடைவெளியின்றி வேதாவினை நெருங்கி அணைத்தவள் தேம்பி அழத் தொடங்க... அவளின் அழுகையினை எதிர்பார்த்த வேதா உச்சியினில் இதழ் பதித்து முதுகினைத் தடவி ஆறுதலாக இரு கரம் கொண்டு அணைத்துக் கொண்டான்.
பல நிமிடங்கள் கழித்து ரம்யா, ஆசுவாசம் அடைந்தவள் அவனின் முகம் நோக்கி விழிகளில் மன்னிப்பினை யாசிக்க.. வேண்டியதில்லை எனும்படி விழிகளில் உணர்த்தியவன் அவளினை இருக்கையில் அமர்த்தி அருகில் அவளது வலது விரல்களினைப் பிடித்துக் கொண்டே சிலவற்றினை உரைக்கவும் வியப்பில் விழி உயர்த்தியவள் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் துளிகள்.. மொத்தமாய் கூறி முடித்தவன் அவளினை தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள.. ஆழமாய் அவனுக்குள் புதைந்தவள் அவனை நினைத்து நெகிழ்ந்து தான் போனாள்...