பால்கனியில் நின்று கொண்டிருந்த ராஜியின் மனதினிலே ஆயிரமாயிரம் யோசனைகள்...! தன் காதலினை அறிந்து முழுதாக ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. ஆனால் அவளின் மன ஓட்டங்கள் அமுதனின் காதல் பற்றியே இருந்தது.. காதலில், தான் காதலிப்பவரின் வலி மட்டுமே பிரதானமாய் இருக்குமல்லவா?? அப்படித்தான் ராஜியின் காதல் அமுதனின் வலியினை எண்ணி மனதிற்குள் கலங்கியது...
வெளியில் வந்த அமுதன் ராஜி இன்னும் பால்கனியில் நின்றிருக்கக் கண்டு அவனும் அவ்விடம் செல்ல... எங்கே தானிருக்கும் மனநிலையில் அவனை அணைத்துக் கதறி விடுவோமோ என்று எண்ணியவள் அவன் முகம் பார்க்காது உள்ளே சென்று விட்டாள். அமுதனுக்கு அவளின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தாலும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அடுத்த நாள் வேதாவின் திருமணம் செல்லும் வரையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது.
இடையில் தானறிந்த விவரங்களினை பரணியிடம் கூறிய ராஜி தனது காதலினை மட்டும் மறைத்துவிட்டாள். அதனை அறிந்த பரணி அண்ணனின் நடவடிக்கைகளுக்கு முழுதாகக் காரணம் அறிந்து கொண்டான். ஆனால் அவனுக்கு இன்னும் புரியாத ஒன்று யாரையும் கட்டிக் கொள்ள மறுத்த தமையன் ராஜியினை மட்டும் கட்டிக் கொள்ள சம்மதித்தது தான். அதனை மேலும் யோசிக்காது கிடப்பில் போட்டவன் "அப்பெண் யாரென தெரிந்ததா ராஜி", எனக் கேட்டான்.
"உன் அண்ணன் விவரமா யாரு பெயரும் போடல.. ஆனால் அந்த பெண் இப்போ உயிரோட இல்லைன்னு மட்டும் தெரியுது.. அவரோட வலியும் புரியுது", ராஜி கூறினாள்.
"அண்ணாவோட மனசை மாத்துறது என் பொறுப்பு ராஜி. அவருடைய மனசில் இருக்க வலியைக் கண்டிப்பா குறைப்பேன்", பரணி கூற ராஜி அவனை அணைத்துக் கொண்டாள்.
வேதாவின் வீட்டில் யுவா அவனறையில் கிளம்பிக் கொண்டு இருக்க... ரம்யா, யாருக்கோ திருமணம் என்ற இயந்திர கதியில் கிளம்பிக் கொண்டு இருக்க.. வேதா மனம் நிம்மதியில் இருந்தாலும் பலவித குழப்பமான இந்த சூழ்நிலையில் திருமணம் நடப்பதினை நினைத்து வருந்தவே செய்தான்.