அப்பா அதிர்ச்சியில், அருகில் இருந்த சோபாவில் விழுந்து, அமர்ந்து கொண்டார்.
அன்பு விக்கித்து போய் சித்தியை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
சித்தி கண்களை துடைத்து விட்டு, "ராத்திரி சின்ன மாமா வீட்டுக்கு வந்தப்ப, நல்லா குடிச்சிருந்தாரு... நான் தான் கதவை திறந்து விட்டேன். அவசரமா அவர் மாடி ஏறி, அன்புவோட ஏதோ சத்தமா சண்டை போட்டுட்டு இருந்தாரு. நானும் என்ன பிரச்சனைன்னு.. பக்கத்துல போயி கேட்டுட்டு இருந்தேன். அப்ப தான் என்னோட தாலியை அறுத்தது சின்ன மாமான்னு அவர் சொல்ல எனக்கு புரிஞ்சுது" என
விசும்பி சித்தி அழ,
அருகில் தரையில் அமர்ந்து, சுவரில் சாய்ந்திருந்த அம்மா, கதற தொடங்கினாள்.
சித்தி தொடர்ந்தாள்.
"இவ்வளவு நாள்.. இந்த ஊரே 'சின்ன மாமா தான் என் புருஷனை கொன்னாரு'ன்னு புரணி பேசினப்ப கூட நான் நம்பலை. அவரு அப்படி செஞ்சிருக்க மாட்டாரு. அக்கா மக தாலியை அறுக்கிற அளவுக்கு கொலைகாரன் இல்லைன்னு நெனச்சு மனசை தேத்திக்கிட்டேன். ஆனா கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாம ஆசைப்பட்ட அக்கா மக கிடைக்கலன்னு, வவுத்து புள்ளத்தாச்சியா இருந்த என்னை விதவையாக்கி, வெட்டியா, இந்த வீட்டுல மூலையில உக்கார வச்சதே அவர் தான்ன்னு தெரிஞ்ச பிறகு.. எங்கிருந்தோ ஒரு வெறி.. இப்படி ஒரு மிருகம் உலகத்துல நடமாடவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
அன்புவோட வாக்குவாதம் பண்ணிட்டு, மாமா கீழ்வீட்டு ஹாலுக்கு வந்து என்னை கூப்பிட்டு எலும்பிச்சை ஜூஸ் போட்டு தர சொன்னார். அப்ப தான் பலசரக்கு ரூம்ல இருந்த பூச்சி மருந்தை ஜூஸ்ல கலந்து குடுத்தேன். மருந்து வேலை செய்யிற நேரம் அவர் முகிலனோட சண்டை போட்டு கீழ விழுந்துட்டார். நானும் என் ரூமுக்குள்ள போயி தூக்குல தொங்கலாம்னு முடிவு பண்ணி ரூம் உள்ள சாத்திக்கிட்டேன். என்னென்னவோ செஞ்சும் எனக்கு தற்கொலை பண்ணிக்க தைரியம் வரல. ஒரு உயிரை கொன்ன எனக்கு என்னோட உயிரை மாச்சுக்க தைரியம் இல்லாத கோழையா மாறிட்டேன். ஆனா நான் செஞ்ச தப்புக்கு சிறைக்கு போக தயாராயிட்டேன்.. ! அன்புவையும் அக்காவையும் குறை சொல்லாதீங்க மாமா. அவங்க மாறி ஒரு குடும்பம் கிடைக்க நீங்க புண்ணியம் பண்ணிருக்கணும்"
என்று நிறுத்திவிட்டு புடவை தலைப்பில் முகத்தை துடைத்து கொண்டாள்.
அன்பு ஓடிச்சென்று சித்தியை கட்டிக்கொண்டு அழுதான்.
"சித்தி நீங்க ஏன் இப்படி பண்ணினீங்க.. ஒரு ஈ எறும்புக்கு கூட தீங்கு செய்ய மாட்டீங்க.. நீ ஜெயிலுக்கு போனா நாங்க என்ன பண்ணுவோம்.. "
"அன்பு...!!!!" என சித்தியும் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள்.
அன்பு அப்பாவை நோக்கி கோபமாக,
"இப்ப நீங்க கொன்ன ரெண்டு அப்பாவி உயிரை உங்களால திரும்பி கொண்டு வரமுடியுமா. ?? முகிலனோட அம்மாவையும் அப்பாவையும் உங்களால திருப்பி தர முடியுமா? உங்க சாதி வெறிக்கு இன்னும் எதனை பேர பலியாக்க போறீங்க?" என கேட்க,
அப்பா, "அவங்க சித்தப்பாவை கொலை செய்யலன்னாலும் அவங்க தூக்குல தொங்க வேண்டியங்க தான்!!! அந்த முகிலன் ஊருக்கு வந்தா அவனுக்கும் அதே கதி தான்!!! நேரம் கிடைச்சிருச்சுன்னு என்கிட்டே குரலை உசத்தி பேசுறியா? பிச்சுருவேன்!!!" என ஆவேசமாக கூறினார்.
அன்பு, "நாக்கில நரம்பில்லாம நியாமில்லாம பேசாதீங்க... பண்ணுன தப்ப திருத்திக்குங்க... மேல மேல தப்பு பண்ணாதீங்க..." என கூற,
அப்பா அவனை முற்றிலும் பொருட்படுத்தாமல் திண்ணையில் காத்திருந்த போலீஸ் அதிகாரிகளை அழைத்தார்.
"இந்த கொலையை பண்ணினது இந்த பொம்பள தான். கைது பண்ணி லாக்கப்ல போடுங்க. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டா.. சொந்த தாய் மாமனையே விஷம் வச்சு கொன்னுட்டா.. .. தட்டுவாணி சிறுக்கி.. ஜெயில்ல போய் களி திங்கட்டும். முன்ன சொன்ன மாதிரி கடன் தொல்லை தாங்காம, கருப்பனும் அவன் பொண்டாட்டியும் தூக்குல தொங்கிட்டதா ரெடி பண்ணிடுங்க"
என சொன்னார்.
போலீஸ் அதிகாரி, "ஓகே சார். சார் கொஞ்சம் formalities இருக்கு. Postmortem பண்ணனும். அவர் எம்பி வேற.
ஸ்டேட், சென்ட்ரல் கவர்ன்மென்ட் கிட்ட சொல்லணும்..பார்லிமென்ட் செகரட்டரி கிட்ட சொல்லணும்.. நாங்க பார்த்துகிறோம். நீங்க மத்த வேலையை பாருங்க"
சில நிமிடங்களில் போலீஸ் ஜீப்பும் ஆம்புலன்சும் இறங்கியது. பிணத்தை எடுத்து வேனில் வைத்து விட்டு, சித்தி கோகிலாவை விலங்கிட்டு அழைத்து சென்றனர். அம்மா கதற, கதற, அப்பா பொருட்படுத்தாமல் டிரைவரிடம் சென்று,
"டேய் எல்லா வேலையும் பொறுப்பா பண்ணு.. !! போஸ்டர் போடுறதில் இருந்து காடு வரைக்கும் எல்லாம் பக்கவா இருக்கணும்..!"என சொல்லிவிட்டு விம்மி,
"சாகுற வயசாடா அவனுக்கு.." என கேட்க,
டிரைவர் அவன் பங்குக்கு கதறினான்.
----------
சொந்த பந்தங்கள் அதிகமாக சூழ ஆரம்பிக்க, அரசியல் தலைகளும் வந்த வண்ணம் இருந்தனர். தலைவரும் வருகிறார் என்பதால் ஊரே பரபரப்பாகி விட்டது.
அன்புவோ நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்தான். அம்மாவோ வரும் உறவு கார ஊர் கார பெண்களுடன் சேர்ந்து ஒப்பாரி வைத்த படி இருந்தாள்.
திடீரென்று முகிலனிடம் இருந்து போன்.
அன்பு பாத்ரூம் உள்ளே அவசரமாக நுழைந்து போனை எடுத்தான். மறுமுனையில் முகிலனின் தழுதழுத்த குரல் கேட்டது.
"டேய்!!!! என்னடா ...!!!! அய்யோ... என்னடா!!!! என் குடும்பத்தை நாசம் பண்ணிட்டாய்ங்க.. !!!!! அய்யோ.. !!!!"
முகிலன் பேசுவது விட்டு விட்டு கேட்டாலும், அவன் கொட்டும் உணர்ச்சிகள் முழுமையாக அன்புவுக்கு புரிந்தது.
அன்புவுக்கு அழுகை பொத்து கொண்டு வந்தது.
'யார் முகிலனுக்கு விஷயத்தை சொல்லி இருப்பார்கள்? கொடுக்காவா?' என்ற கேள்வி உள்ளுக்குள் அன்புவுக்கு எழ, பேச முயன்றான். வார்த்தைகள் வரவில்லை.
"என்ன சொல்லி.. உனக்கு ஆறுதல் சொல்றது முகிலா.. " அன்புவும் உடைந்து குலுங்கினான்.
"என்னோட தங்கச்சிய.. நீ பாத்துக்கடா.. ----- ----- நான் இப்பவே கிளம்பி வர்றேன் ஊருக்கு.. "
"வேண்டாம் டா.. நீயாவது உயிரோட இருக்கணும். வேண்டாம் வந்திடாதே.. "
"அதுக்காக கொள்ளிக்கூட.. ----- ------- ---------"
"மச்சி! நீ பேசுறது சரியா கேக்கல.. நான் சொல்ற வரைக்கும் ஊருக்கு வராத டா.. ப்ளீஸ் டா.. கெஞ்சி கேக்குறேன்.. ப்ளீஸ் டா... "
கால் கட்டானது.
மறுபடியும் மறுபடியும் அன்பு
கால் பண்ணியும் அவனை போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. அப்போது தான் பாத்ரூமில் சிக்னல் இல்லை என்பதை உணர்ந்தான்.
'மாடியில் சிக்னல் கிடைக்கும்' என
அன்பு வெளியே வந்து மாடி ஏற முயன்ற போது,
வினோத், "அன்பு!" என கூப்பிட்டு அருகில் வந்தான்.
"சாரிடா.. எவ்வளோ நடந்து போச்சு. நீ தைரியமா இருக்கணும்.. முகிலன் கிட்ட இருந்து போன் வந்துச்சா.. ? அவன் பத்திரமா இருக்கானா.. ? இப்ப ஊர் இருக்க நிலைமையில அவன் வந்தா ரொம்ப பிரச்னையாயிடும்..!"
அன்பு அவசரமும், அவஸ்தையாகவும்,
"ஆமாம் வினோத். நானும் அதான் நினைக்கிறன். நீ வெயிட் பண்ணு... நான் அஞ்சு நிமிஷத்தில வந்து பேசுறேன்"
என கூறி விட்டு மொட்டை மாடியை அடைந்து முகிலனுக்கு போன்
போட்டான்.
"போன் switched off" என மெசேஜ் வர அன்பு குழம்பினான். பல தடவை இடைவெளி விட்டு முகிலனுக்கு போன் பண்ணிக்கொண்டே இருந்தான். 'Switched off' என்றே மெசேஜ் வந்து கொண்டிருந்தது. அன்புவுக்கு முகிலன் ஊருக்கு வந்துவிட கூடாது என ரொம்பவே பயந்து போயிருந்தான்.
சித்தப்பாவின் ஈம சடங்குகள் முடிந்தது. முகிலனின் அம்மா அப்பாவின் சடங்குகளும் பலத்த போலீஸ் பாதுகாப்பில் முடிந்தன. முகிலன் வரவில்லை. ஆனால் அவன் தங்கை அமுதா அழுதது கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கும்.
அன்பு அவளை தேற்றி, "அமுதா! அண்ணனால வர முடியில.. போன் பண்ணி உன்னை பாத்துக்க சொல்லிருக்கான். நீ அழாதம்மா. உனக்கு வேண்டியதை நான் பண்ணுவேன். இனி நானும் உனக்கு அண்ணன் தான்" என கூறி கண்களை துடைத்து விட்டான்.
தகனத்துக்கு வேண்டிய பணத்தை கொடுத்து அந்த குடும்பத்தின் துக்கத்தில் பங்கு பெற்றான் அன்பு. காரியம் முடியும் வரை அன்பு அங்கிருந்து விட்டு இரவு தான் வீட்டுக்கு வந்தான்.
முகிலனை போனில் தொடர்பு கொள்ள முடியாதது அவனுக்கு பெரிய உறுத்தலாக இருந்தது.
------------
இவ்வாறு ஒரு வாரம் கழிந்தது.
அன்புவுக்கு வினோத்திடம் இருந்து போன்.
"ரொம்ப அவசரம் முக்கியம்... நீ நேரா என் வீட்டுக்கு வா", என வினோத் சொல்ல, கேள்வி குறியோடு வினோத்தின் வீட்டுக்கு சென்றான்.
அங்கே வினோத் சொல்லியது, அவன் உயிரையே உருக்கியது போல இருந்தது.
YOU ARE READING
மேகமாய் நீ.. தாகமாய் நான்! (Thirsty For Your Love)
RomanceAnbu, a college lecturer, with a sorrow past of love failure but everything changes because of one phone call. Perhaps will it bring what has been missed in his life - love? Or will it devastate him even more? Read this story full of great moments...