இந்துமா சமுத்திரத்தின் முத்து, அந்த மாபெரும் நீராழியின் கண்ணீர்த்துளி என்று பலரும் பலவாறு வியக்கும் இலங்கைத்தீவின் கீழக்கரை; பன்னெடுங்காலமாக மீன்பாடும் தேனாடு என அழைக்கப்படும் இடம் அது.
உவர்க்கடலினின்றும் உப்புக்காற்று ஊருக்குள் வீசியவாறு இருக்கும். உதய வேளையில் எழுவான்கரையும் அஸ்தமத்தில் படுவான்கரையும் இதயத்தைக் கொள்ளை கொள்வனவாய் விளங்கும்.
நீர்க்கடலின் அந்தமும் செவ்வானத்தின் தொடக்கமும் கலந்துவிடாது தூரத்தே ஒன்றையொன்று தொட்டுத் தழுவுவதை நேத்திரங்களை விலத்தாது ரசித்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள்.
நீலவானம் மஞ்சளாகி, செம்மஞ்சளாகி செந்நிற வண்ண ஜாலங்கள் நிகழும் அந்தி நேரமும் தூரத்தே தெரியும் வானமும் பாதணிகளுக்குள் நுழையும் கடற்கரை மணலும் சாய்ந்துகொள்ள ஏதுவாய் வளைந்து வளர்ந்திருந்த தென்னந் தண்டும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்; அண்டம் அனைத்தையும் ஒரு துண்டம் தவறாமல் படைத்து ஆளும் இறைவனின் அற்புதமான இயற்கையான படைப்புக்களைப் பார்த்து ரசிப்பது மிகவும் மிகவும் பிடிக்கும்.
கையில் மங்கலான சாம்பல்வெள்ளைத் தாள்களைக் கட்டாக அடுக்கி ஒரு குண்டுப் பேனாவின் மூடியைப் பேனாவின் பின்புறம் போட்டுக் கையில் பிடித்து அதனால் தன் நாடியைத் தட்டித் தட்டி மனதினுள் வார்த்தைகளைக் கோர்த்து பேனா மையால் தாள்களை நிரப்பிக் கொண்டிருந்தாள்.
அன்றும் ஏதேதோ எழுதினாள்தான். ஆனால் வழமைபோன்று வீசிய மாலைநேரத் தென்றலை ஏனோ எப்போதும்போல அவளால் உணர முடியவில்லை.
அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் அந்த வளைந்த தென்னை மரத்தில் சாய்ந்துதான் கடலையும் கடற்கரையையும் பார்ப்பாள்; வெறிப்பாள்; ரசிப்பாள். அது அவளுக்கே அவளுக்கான இடம் போன்றது. தரைதொட்டிருந்த ஓரிரு ஓலைகளுக்கிடையில் மறைந்து நின்றிருப்பதற்கு வாகாக அந்த இடம் அமைந்திருந்ததில் ஒரு வசதி அவளுக்கு.
YOU ARE READING
தென்றலே தழுவாயோ..?
Spiritual#4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் ----- ----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.