• 18 •

110 10 25
                                    

              ன்றைய தினம் வானம் அழற்கதிர்களைப் பிரசவித்துக் கொஞ்ச நேரமே ஆகியிருந்தது. பொன்னிற முலாம் பூசப்பட்ட கதிர்கள் ஜன்னலின் திரைச்சீலை விலகியிருந்த இடத்தைத் தமக்கு சாதகமாக்கிக்கொண்டு அனுமதி வேண்டாது அறையினுள் நுழைந்திருந்தன.

இதற்கு மேல் மூச்சு விடுவதற்கும் இடமில்லையென்று மூச்சை அடக்கிக்கொண்டு இறாக்கையில் நிறைந்திருந்தன புத்தகங்கள். அதன் கீழிருந்த மேசையிலும் மின்விசிறியின் காற்றுக்குத் திறக்கப்பட்டிருந்த புத்தகமொன்றும் கவிழ்த்து வைக்கப்பட்டவை சிலவுமென்று இருந்தன.

கொஞ்சம் இருளாக இருந்தாலும் மின்விளக்கை நாடாமல் வழக்கம்போல பால்கனிப் பக்கமிருந்த திரைச்சீலையை முழுவதும் நகர்த்தி  வெளியே இருந்து வந்த இயற்கை ஒளியை அறைக்குள் நிரப்பிக் கொண்டாள் ஆலியா.

கட்டிலில் தலையணைக்கு அருகிலும் போர்வைக்கு அடியிலுமென்று ஆங்காங்கே கிடந்த தாள்களை எல்லாம் சேர்த்து எடுத்து மேசையின் மேல் வைத்தவள் தன் படுக்கையை சரி செய்துவிட்டு நன்றாக நேரமெடுத்து அறையைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்தினாள்.

இந்த ஐந்தாறு நாட்களாகவே அறை முழுவதும் தாள்களும் புத்தகங்களும் கண்ட இடத்தில் கிடந்து ஒரே அமர்க்களமாக இருந்தது. எல்லாம் மொத்தமாகக் கிடைத்துவிட்ட சுதந்திரத்தில் கண்மண் பாராது தன் எழுத்துக்களுடன் விளையாடி தனக்குப் பிடித்த எழுத்துக்களுடன் உறவாடியதன் வினைதான்.

அறையை ஒழுங்குபடுத்தியதிலேயே அந்த ஞாயிறு நாளின் ஆறில் ஒரு பகுதி கடந்து சென்றது.

அறையை ஒருதடவை முழுமையாகப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு ஒரு பெருமூச்சையும் இழுத்து விட்டுக்கொண்டாள், எப்படியும் முன்பு போலவே  மறுபடியும் கலைந்து போகத்தானே போகின்றதென்ற நினைப்புடன்..

எல்லோருமே வீட்டிலிருக்கும் நேரமாதலால் அநேகமான நேரங்களில் பேச்சுக் குரல்களுக்குப் பஞ்சம் நிலவிய அந்த வீட்டில் அன்று மருந்துக்கேனும் கொஞ்சம் சத்தம் இருக்கத்தான் செய்தது. அன்று மக்கீனும் வீட்டிலிருந்தார்.

தென்றலே தழுவாயோ..?Where stories live. Discover now