• 7 •

86 11 40
                                    

               குணதிசையில் முகம் முழுதும் குங்குமம் அப்பியவன் மேலெழுந்ததும் பால்கனியின் கம்பியில் கைகளை ஊன்றியவாறு காலைநேரப் பரபரப்புக்களை ஆராய்ந்துகொண்டு மனதிற்குள் கவி வடிப்பாள்.

அவ்வப்போது இருள் கவியும் நேரத்துக்கு முன்னதாக மாலை நேரத்தின் மங்கும் ஒளியில் தென்னந் தண்டுக்குத் தன் பாரத்தைக் கொடுத்துக்கொண்டு குண்டுப்பேனையால் தாள்களை நிரப்புவாள்.

இதற்கிடைப்பட்ட நேரத்தில் வார நாட்களில் புத்தகங்கள் மற்றும் தாள்கட்டு சகிதம் துள்ளி ஓடும் மான்குட்டியென உற்சாகத்துடன் கிளம்பி நூலகத்துக்குச் செல்வாள்.

கனவில் நூலகராகத் தன்னை நினைத்துக்கொண்டு கனாவீதியில் உலாவரும் நாட்கள் கடந்து சென்று உண்மையிலேயே தான் ஒரு சிறு நூலகராக ஜின்னா லைப்ரரியின் இறாக்கைகளுக்கிடையில் நடந்து செல்லும்போது பெருமிதமாக உணர்ந்தாள்.

நூற்களின் வரிசையை ஆராய்ந்து சரிபார்த்து, வாசகர்கள் இன்னும் திருப்பித் தராத புத்தகங்களின் பெயர்களை எழுதி ரஹ்மாவிடம் கொடுப்பாள். பின்பு கொஞ்ச நேரம் அவரின் அனுமதியுடன் சுவாரசியமான புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்பாள்; வீட்டிற்கும் எடுத்துச் செல்வாள். எழுத்து விரும்பிகளிடம் கதைத்து அவர்களிடம் பல புத்தகங்கள் பற்றிக் கருத்துக் கேட்பாள்.

அவ்வப்போது ஜின்னா லைப்ரரியில் ஆண்கள், பெண்கள் என எல்லோருக்கும் பொதுவாகப் போட்டிகளும் நடைபெறுவது உண்டு. அவள் அங்கிருந்த காலத்தில் போட்டிகளில் சேர்ந்து பரிசுகள் கூட வென்றிருக்கிறாள்.

அவள் தினமும் ரசிக்கும் கடலில் போலவே அவள் மனதில் புரண்ட வார்த்தையலைகளின் நுரைகளைச் சேர்த்தெடுத்தாற்போன்ற தன் கிறுக்கல்களையும் அவ்வப்போது தோன்றும் கருக்களை வைத்துக் கற்பனை செய்து எழுதும் சிறுகதைகளுயும் கூடவே தன் பைக்குள் வைத்து எடுத்துச் செல்வாள்.

புதிதாக வெளிவந்த நாளாந்த, வாராந்த மற்றும் மாதாந்த சஞ்சிகைகள் நூலகத்தின் வாசலுக்கு அருகில் போடப்பட்டிருக்கும் மேசையில் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் உள்ள சிறுவர் ஆக்கங்கள் பகுதிக்கும் கதை, கட்டுரை, கவிதை போட்டிகளுக்கும் தான் எழுதியவற்றை ரஹ்மாவின் உதவியோடு அவள் அனுப்பி வைப்பதுண்டு. அதற்கடுத்த முறை வெளியிடப்படும் சஞ்சிகைகளில் அவளது ஆக்கங்கள் பதிப்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டு பூரித்துப் போவாள். அது ஒரு தனி ஃபீல்!

தென்றலே தழுவாயோ..?Where stories live. Discover now