வானை நோக்கி எறியப்பட்ட வெள்ளை முத்து நிலவாய்ப் பதிந்திருக்க, அதில் உடைந்து சிதறிய துண்டுகள் ஆங்காங்கே நட்சத்திரங்களாகப் பதிந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.
கடலலைகள் தென்றல் காற்றாய் வந்து தடவ, தன்னை மறந்து அதில் லயித்திருந்தவள் இஷா அதான் முடியும் வரையிலும் அங்கேதான் நின்றிருந்தாள்.
தொழுகைக்காக ஏற்கனவே வுழூ செய்திருந்தவளின் கண் முடிகளில் இன்னும் ஈரம் காயாமல் இருக்க, கடலிலிருந்து கஷ்டப்பட்டுத் தன் பார்வையை விலக்கிக்கொண்டு அறையினுள் நுழைந்த ஆலியா இரவுத் தொழுகையை நிறைவேற்றினாள்.
கதவைத் திறந்துகொண்டு கீழே சென்றவள் அரவம் ஏதும் இல்லாததை உணர்ந்து எல்லோரும் எங்கே சென்றார்கள் என்று கண்களால் வீட்டை அலசிப் பார்க்க, நடு மண்டபத்தில் இருந்த சோபாவில் அந்த மூன்று வயதுப் பையன் ஸஹி அப்படியே தூங்கிப் போயிருந்தான். மற்றவர்கள் இருவரும் அறையில் தூங்குகிறார்கள் போல. சார்ஜரில் சொருகப்பட்டிருந்தவை முன்னரிருந்தபடி அப்படியே கிடந்தன.
லெதர் சோபாவில் பதிந்திருந்த அவனது உப்பிய கன்னம் நன்றாக வியர்த்திருக்க, அவனை அதிகம் உசுப்பிவிடாமல் மெதுவாகத் தூக்கியவள் அண்ணனின் அறைவரை தூக்கிச் சென்றாள், கட்டிலில் படுக்க வைக்கலாம் என்று எண்ணிக்கொண்டு..
அறைக் கதவுக்கு முன்பு சென்று நின்றவளது கைகளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை இருந்ததால் கதவைத் திறக்க முடியவில்லை. வேலைக்காரியைக் கூப்பிட யோசித்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் சற்று அதிர்ந்தாள்.
கதவைத் திறந்துகொண்டு வெளியேறிய ஸமீரைப் பார்த்து இவள் புன்னகைக்க, அவனோ காதிற்கும் கழுத்திற்கும் இடையில் அமிழ்த்திப் பிடித்திருந்த செல்போனில் கதைத்தவாறு கையில் இருந்த தண்ணீர் போத்தலுடன் வேறு பக்கம் பார்த்தவாறு சென்றுவிட்டான்.
பழக்கப்பட்டதே. ஆயினும் ஆலியாவுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.
YOU ARE READING
தென்றலே தழுவாயோ..?
Spiritual#4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் ----- ----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.