பார்ப்போரின் கண்களுக்குக் காலைநேர விருந்தாய் அரைவேக்காட்டு மஞ்சட்கருவைப் போலே தங்க நிறத்தில் கடல் தட்டின் விளிம்பினால் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி வந்துகொண்டிருந்தது சூரியன். தன் கதிர்த் தூரிகைகளால் கடல் தண்ணீருக்கும் தன் தங்க வண்ணத்தைத் தீட்டும் செயலில் அது மூழ்கியிருக்க,
அதற்கே போட்டியாய் வழக்கத்தைவிடவும் வெகு சீக்கிரமே எழுந்து சீக்கிரமே கடக்காது இம்சை செய்து கொண்டிருந்த நேரத்தை வசை பாடிக்கொண்டு வேண்டுமென்றே நத்தைக்குப் போட்டியாக மெத்த மெதுவாகத் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் ஆலியா. முந்தைய இரவே தன் தோள்பை முதற்கொண்டு எல்லாவற்றையும் எடுத்துத் தயாராக வைத்திருந்தமையால் காலையில் அவ்வளவாக வேலை ஒன்றும் இருக்கவில்லை.
காலையுணவின்போது ஆஸிமாவுடனான ஐந்து நிமிட உரையாடலும், இன்ஸ்டன்ட் விடுமுறையை முடித்துக்கொண்டு தன் பணிக்குத் தயாராகி தூரப்பயணத்திற்குக் கிளம்பிய மக்கீன் பாசமாகக் கொடுத்த பணமும் அரைத் தூக்கத்திலேயே உலாத்திக் கொண்டிருந்த ஷராவைப் பாடசாலைக்குக் கிளப்ப உதவி செய்வதும் என்று இருந்தவாறே இந்தப் பக்கம் நூலகத்திற்குச் செல்லவும் படு ஆர்வமாகத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
நரம்புகளுக்குள் புது இரத்தம் பாய்ந்து உற்சாகமடையச் செய்ததை அப்பட்டமாக உணர்ந்தவாறே அந்தக் காலை நேரத்தை ரசித்துக் கொண்டிருந்தவளைப் பார்க்கையிலேயே அவ்வுற்சாகம் சந்தனகுமாரியையும் தொற்றிக்கொண்டாற்போல் தோன்றியது.
கடிகாரத்தின் நீண்ட முள் எட்டைத் தொட எத்தனிக்கவே, நேர்த்தியாகத் தயாராகித் தன் தோள்பை சகிதம் முன் மண்டபத்தில் அமர்ந்திருந்தவள் முக்கியமான பொருட்களை ஒன்றுக்கு மூன்று தடவைகள் சரிபார்த்துக்கொண்டு எழுந்து சந்தனகுமாரியிடம் பயணம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.
நூலகம் நோக்கி நடந்து கொண்டிருந்தவளது உற்சாகத்தை அந்தக் காலை நேரத்துக் குளிர்ச்சி கலந்த வெய்யிலும் தொட்டுப் பார்த்து உசுப்பிவிட்டுக் கொண்டிருக்கவே, தானாகத் துள்ளிக் குதித்த தன்னைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள் ஆலியா.
YOU ARE READING
தென்றலே தழுவாயோ..?
Spiritual#4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் ----- ----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.