தனற் கதிர்களை விரித்தே மேலெழப்போகும் கதிரவனின் வரவை எதிர்பார்த்துக் கானம்பாடி ஆடி அசைந்து கொண்டிருந்த கடலை நோக்கியவாறு பால்கனியில் நின்றிருந்தாள் ஆலியா.
தூரத்தே கரையில் நட்டுவைத்திருந்த கம்புகளில் இருந்து கயிறால் கட்டப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகளை சிலர் அவிழ்த்துக் கொண்டும் சிலர் படகுகளைக் கடலினுள் இழுத்து அதில் ஏறிச் சென்று கொண்டும் இருந்தனர். மீன் பாடும் தேனாட்டு ஜனத்தின் முக்கிய வாழ்வாதாரமே மீன்பிடித் தொழில்தானே?
கடற்கரையில் யாரோ கட்டிவைத்திருந்த மணல் வீடு சரிந்திருந்ததுபோல முந்தைய இரவு இவளுள் இருந்த உற்சாகமும் வடிந்துவிட்டிருந்தது. எல்லாம் அவள் தாயை நினைக்கையில்தான். நான்கரை மணியிலிருந்து அவ்வாறே நின்று கொண்டிருந்தாள்.
பக்கத்து அறையில் கதவு திறக்கும் சந்தடி கேட்கவே, அவர் 'அதி'காலையுணவுக்காக மாடியிறங்கும் அரவமும் இவளுக்கு விளங்கிற்று.
தன் தாயிடம் எவ்வாறு அனுமதி கேட்பதென்று ஒன்றுக்கு மூன்று தடவைகள் ஒத்திகை பார்த்துக் கொண்டவள் மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு படிகளில் இறங்கினாள்.
அந்தப் பெரிய சமையலறையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த வட்ட மேசையிலே அமர்ந்தவாறு உண்பதற்காகத் தட்டில் அவித்த கடலையை எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தார் ஆஸிமா. இவளும் அருகே சென்று அமர்ந்தாள்.
"மம்மா.." என்று இவள் தயங்கியவாறே அழைக்க,
"ம்ம்? Results are expected to be released soon.. na?" என்றார் எடுத்த எடுப்பில்.
இவளுக்கோ பக்கென்றது. அவராகவே கனவுக் கோட்டை கட்டிக்கொண்டு எதிர்பார்க்கும் பெறுபேற்றைக் கட்டாயம் தன்னால் எடுக்க முடியாது என்று ஆலியாவுக்கு நிச்சயமாகத் தெரியும். இவள் விருப்பத்துடன் படித்திருந்தால்தானே?
"ம்ம்.." என்றாள் கலக்கத்துடன்.
அவர் சாப்பிடுவதையே பார்த்திருந்தவளையும் சாப்பிடுமாறு சொல்ல, தட்டில் கடலைகளை இட்டு ஒவ்வொன்றாய் எடுத்து வாயில் போட்டு ருசிக்காமல் மென்று விழுங்கியவாறு அமர்ந்திருந்தாள். ஆஸிமாவோ சாப்பிட்டு முடிந்ததும் எழுந்து சென்றுவிட்டார்.
YOU ARE READING
தென்றலே தழுவாயோ..?
Spiritual#4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் ----- ----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.