1 ஆய்வுப் பயணி
தன்மயா என்று பெயர் கொண்ட அந்த பெண், பின்னால் திரும்பி திரும்பி பார்த்தபடி ஓடினாள். அவளை சிலர் துரத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யார், எதற்காக அவளை துரத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அவளுக்கு புரியவில்லை. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு, அவள் இப்பொழுது தான் சென்னை திரும்பினாள். அவள் தாராசுரம் கோவிலுக்கு சென்றது, அவள் மிகப்பெரிய பக்தை என்பதால் அல்ல. பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றி அறிய அவளுக்கு இருந்த ஆர்வம் காரணமாக...!
அந்த ஆர்வத்தை அவள் மனதில் விதைத்தது அவளது தாத்தா, குலோத்துங்கன். கிட்டத்தட்ட தமிழர்களின் வரலாறு அணைத்தும் அவளுக்கு அத்துப்படி. சிறு வயதிலிருந்தே அதை அவளுக்கு புகட்டியவர் அவளது தாத்தா தான். தொல்பொருள் ஆய்வாளரான அவர், பல கதைகளை சொல்லி அவளை வளர்த்தார். அது, கல்லூரியில் எபிகிராபியை (கல்வெட்டு பற்றிய ஆய்வு) விருப்பப்படமாய் படிக்கும் அளவிற்கு அவளுக்குள் வளர்ந்து நின்றது.
அதனால், அவளுக்கு புதுப்புது தகவல்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஒவ்வொரு நாளும் மேலோங்கி கொண்டே இருந்தது. அதனால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்த்து, அதில் இருக்கும் கல்வெட்டுகளை படித்துவிடுவது என்ற முடிவில் இருந்தாள் அவள்.
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால், பணம் அவளுக்கு ஒரு பிரச்சனையாக இருந்ததே இல்லை. அவளது பெற்றோர் இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அப்பா வரலாறு, அம்மா தமிழ்! அதனால் தமிழும், வரலாறும் அவள் ரத்தத்திலேயே ஓடியது.
அவள் பத்தாம் வகுப்பு படித்த வரை, அவளுக்கு சொல்லப்பட்ட கதைகளை எல்லாம், *சொல்கிறார்களே* என்று கேட்டுக் கொண்டிருந்தவளது வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவல்.
*இவ்வளவு பெரிய புக்கா?* என்று ஆரம்பத்தில் அலுத்து கொண்டவள், அதைப் படிக்க துவங்கியவுடன், அதை கீழே வைக்க மனமில்லாமல், சோறு, தண்ணிர், தூக்கம் மறந்து படித்து முடித்தாள்... இல்லை, அக்காலத்திற்கே சென்று வாழ்ந்து முடித்தாள்...!
YOU ARE READING
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)
Fantasyகாலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!