15 இளவரசனின் ஆணை
"இளவரசர் வாகைவேந்தரின் வரவு, நல்வரவாகுக" என்றார் அந்தப் பெண்.
தன் வாழ்நாள் அதிர்ச்சியை அடைந்தாள் தன்மயா. அமுதனா இளவரசன் வாகைவேந்தன்? அவள் அப்படியே உறைந்து நின்றாள். அவள் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது இளவரசன் வாகைவேந்தனுடனா? அந்த உண்மை தெரியாமல், வேடிக்கை பேச்சு பேசி, அவனை எள்ளி நகையாடி கொண்டிருந்தாளே...! அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தன்மயா. அங்கிருந்த அனைவரும், அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூட அவள் உணரவில்லை.
"தன்மயா..." என்று முதல் முறையாக அவள் பெயர் சொல்லி அழைத்தான் அமுதன் என்னும் வாகைவேந்தன்.
திடுக்கிட்ட அவள், எச்சில் விழுங்கினாள். *இங்கே வா* என்பது போல் அவன் தலையசைத்தான். சிறுநடை நடந்து அவனை நோக்கி சென்று அமைதியாய் நின்றாள். மருட்சியுடன் காணப்பட்ட அவள் முகத்தை பார்த்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான் அமுதன்.
"தாங்கள் தான் இளவரசர் வாகைவேந்தரா?" என்றாள் அவனுக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய குரலில்.
பதில் கூறாமல் புன்னகை புரிந்தான் அமுதன். அந்த கேள்விக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. தன்னை ஆசீர்வதித்த அந்த பெண்மணியை ஏறிட்டான் அமுதன். அந்த பெண், தன்மயாவுக்கு ஆலத்தி எடுத்து, அவளது நெற்றியில் குங்குமம் இட்டார்.
"எங்கள் நாட்டிற்கு தங்களை வரவேற்கிறேன்" என்றார் அவர்.
"இவர் எனது தாய், அரசி, அன்பிற்கினியாள்" என்று அவரை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான் அமுதன்.
தனது சுயநினைவை அடைந்த தன்மயா, அன்பிற்கினியாளின் பாதம் தொட்டு வணங்கினாள்.
"எப்பொழுதும் மகிழ்வோடு வாழ வேண்டும்" என்று அவளை வாழ்த்தினார் அன்பிற்கினியாள்.
"அவருடன் இருந்தால் யாராக இருந்தாலும் மகிழ்ச்சியோடு தான் இருப்பார்கள். இவரைப் போன்ற ஒரு பெண்ணை தாங்கள் காணவே முடியாது" என்றான் அமுதன், அங்கிருந்த அனைத்து பெண்களையும் வியப்புக்கு உள்ளாக்கி. ஏனென்றால், அமுதன் இளவரசனாய் முடி சூட்டிக்கொண்ட பிறகு, பெண்களுடன் பழகுவதை குறைத்துக் கொண்டான். அதுவும் இளவரசி காஞ்சனமாலையுடன் அவனுக்கு திருமண பேச்சு ஆரம்பமான பின், பெண்களுடன் பேசுவதையே அடியோடு நிறுத்தி விட்டான்.
ESTÁS LEYENDO
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)
Fantasíaகாலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!