34 எதிர்பார்ப்பு

469 34 2
                                    

34 எதிர்பார்ப்பு

அரசரும் அரசியும் வருகிறார்களா என்று தன்மயா வழிமேல் விழி வைத்து காத்திருப்பதை கண்ட அமுதன்,

"தன்மயா" என்று மெல்லிய குரலில் அழைத்தான்.

அவனைப் பார்த்தாள் தன்மயா. அரியணையை பார்க்கச் சொல்லி அவளுக்கு சைகை செய்தான் அமுதன். அதை பார்த்துவிட்டு மீண்டும் அமுதனை நோக்கி திரும்பி,

"என்ன, அமுதே?" என்றாள்.

"அந்த அரியணையில் அரசியாக வீற்றிருக்க உனக்கு விருப்பம் இல்லையா?" என்றான்.

அந்தக் கேள்வி, அவளது விழிகளை விரிவடைய செய்தது.

"அதற்காக எத்தனை பேர் தங்கள் உயிரையும் விட காத்திருக்கிறார்கள் தெரியுமா?"

"தெரியும் அமுதே...! அதற்காக உயிர் விட்டவர்களின் வரலாறு குறித்து தங்களை விட எனக்கு மிக நன்றாகவே தெரியும். தன் உடன் பிறந்த சகோதரர்கள் என்று கூட பாராமல் அவர்களை கொன்று குவித்து விட்டு, ரத்த வெள்ளத்தைக் கடந்து சென்று அந்த அரியணையில் அமர்ந்த பலரது வரலாற்றை நான் படித்திருக்கிறேன்"

"அவ்வளவு சிறப்பு வாய்ந்த அரியணை உனக்காக விருப்பத்தோடு காத்திருக்கிறது. நீ எந்த முயற்சியும் மேற்கொள்ளாமலேயே அது உன் கட்டுப்பாட்டின் கீழ் வர விரும்புகிறது. அப்படி இருந்தும் நீ அதன் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கிறாயே, ஏன்?"

"ஏனென்றால் அதன் தன்மை பற்றி நான் நன்கு அறிவேன். அதனால் தான் அதை வேண்டாம் என்கிறேன். அது ஒரு போதை. அதில் விழுந்து உழல நான் விரும்பவில்லை. நான் சுதந்திரமான எண்ணங்களுடன் இருக்கவே விரும்புகிறேன்"

"என் நாட்டு சட்டத்திட்டங்கள் உன்னை கட்டுப்படுத்தும் என்று நினைக்கிறாயா? எந்த சட்ட திட்டமும் இன்றி சுதந்திரமாய் வாழ வேண்டும் என்று விரும்புகிறாயா?"

"இல்லை, நான் சட்டதிட்டங்களை பின்பற்றுவது குறித்து பயப்படவில்லை. என் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு, எனக்கென்று தனி சட்ட திட்டங்களை வகுத்து, அதன்படி நான் வாழ்ந்து வருகிறேன். அவற்றை கடந்து செல்ல நான் எப்பொழுதும் நினைத்ததில்லை. கேள்வி கேட்க யாரும் இல்லாதவள் நான். நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்க முடியும். அப்படிப்பட்ட தான் தோன்றித்தனத்தை நான் அறவே வெறுக்கிறேன். நான் ஒழுக்கத்தை மதிப்பவள்."

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Onde histórias criam vida. Descubra agora