எவ்வளவு நாட்கள் கடந்துவிட்டது.. நாட்களா.. சில வருடங்கள் ஆயிற்று.. சொந்த ஊர் காற்றை சுவாசித்தபடி அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினான் செழியன்..
வீடு வந்து சேர்ந்த சில நிமிடங்களில் நுரை பொங்க ஆற்றிக் கொண்டே காபியை கொண்டு வந்து நீட்டினார் செழியனின் அன்னை வைதேகி.
காபியை வாங்கிக் கொண்டவன் ஜன்னல் அருகில் நின்றபடி தன் பார்வையை வெளியே செலுத்தினான்.
“சொல்லுங்க..”என அன்னை வைதேகி மெல்லிய குரலில் தன் தந்தை சத்யநாதனிடம் பேசுவது கேட்டது. தன்னிடம் ஏதோ சொல்ல விழைகிறார்கள் இருவரும் என்பது நன்கு புரிந்தாலும்.. காதில் விழாதவன் போல தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான் செழியன்.
தோட்டத்தை இன்னும் அதே போல அழகாகவே பேணுகிறாள் அன்னை என்பது மட்டும் புரிந்தது. ஒரு நொடி தன் அன்னையிடம் விழிகள் விரித்து ஆச்சரியமாக செடிகளை பற்றி விசாரித்த அவளின் முகம் கண்முன் வந்து போயிற்று.
தன் தொண்டையை செறுமிக் கொண்டு பேசத் தொடங்கினார் சத்யநாதன். “செழியா.. ஏன் ப்பா இப்டி பண்ற.. எங்க மேல எதுவும் கோபமா.. நீ அப்டி கோபப்படுற அளவுக்கு நாங்க எதுவும் பண்ண மாதிரி கூட நியாபகம் இல்லை.. வருஷக் கணக்கா.. வீட்டுக்கு வராம.. ஏன் இப்டி பண்ற.. அப்டி நீ ஓடி ஓடி உழைக்கணும்னு எந்த அவசியமும் இல்லை ப்பா..”என்றார் அக்கறையும் அன்பும் கலந்த குரலில்.
செழியன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வைதேகி.. “நீ இனிமே இங்கே தான் இருக்கணும்.. வேலைக்கு போ.. இல்லை போகாம இரு.. ஆனா இங்கதான் இருக்கணும்.. அதான் என் முடிவு சொல்லிட்டேன்..” என்றார் லேசான கோபத்துடன்.
பெரியவர்கள் இருவரும் அறையில் இருந்து சென்று விட்டது அறிந்ததும் ஒரு பெருமூச்சுடன் திரும்பினான் செழியன்.
அவர்கள் சொல்வதை எல்லாம் அப்டியே செய்துவிட அவனால் முடியுமா.. தெரியவில்லை.. இங்கேயே இருக்க முடிந்திருக்குமானால் ஏன் வேலையை காரணம் காட்டி ஓடி ஒளியப் போகிறான்.