சித்ராவின் கோபத்திற்கு காரணம் புரியாமல் யோசித்தான் செழியன்.. நாளைக்கு என்ன நாள்..
சித்ராவால் எப்படி மறக்க முடியும் அந்த நாளை.
❤❤
கல்லூரியில் இரண்டாவது வருடம்.. மிதுனுக்கும் சித்ராவுக்கும் தங்கள் மனதில் இருக்கும் நேசம் புரிந்தாலும்.. அதை வெளிப்படையாக காட்டிக் கொண்டதில்லை.
தங்கள் வழக்கமான இடத்தில்.. சித்ரா மட்டும் தனியாக அமர்ந்திருந்தாள்.. அப்போது அவளருகில் வந்து அமர்ந்தான் மிதுன்.
“ஆர்த்தி எங்க..” என கேட்டான் மிதுன்.
“ரெக்கார்ட் சமிட் பண்ணப் போனா.. இப்ப வந்துடுவா..”என்றாள் சித்ரா.
எதையோ கேட்க தயங்கியபடி இருந்தான் மிதுன் சில நிமிடங்கள்.
தயக்கத்துடன் மெல்ல அவள் கைகளை பற்றிக் கொண்ட மிதுன்.. “சித்துமா.. நாளைக்கு.. என்கூட கொஞ்சம் வெளியே வர்றீயா..” என கேட்டான்.
“ம்.. வர்றேன்.. எங்க..” என இயல்பான புன்னகையோடு கேட்டாள் சித்ரா.
“நிஜமாவா.. என்கூடவே நாள் முழுக்க இருப்பீயா.. ப்ளீஸ்..”என ஏக்கமாக கேட்டான் மிதுன்.
ஒரு நொடியும் யோசிக்காமல்.. உடன் வர சம்மதம் சொன்னவள்.. “ம்.. ஆனா எங்க.. எதுக்கு..”என புரியாமல் கேட்டாள்.
“அ.. அது நாளைக்கு நான் சொல்றேன்.. சித்துமா..”என மிதுன் சொல்லிக் கொண்டிருக்கையில்.. ஆர்த்தியும் செழியனும் அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை கவனித்த மிதுன்.. “சித்துமா.. நான் நாளைக்கு வந்து உன்னை கூட்டிட்டுப் போறேன்.. அவங்க இரண்டு பேருக்கும் தெரிய வேண்டாம்.. நான் கிளம்புறேன்..” என உற்சாகத்துடன் கிளம்பிப் போனான் மிதுன்.
விடுமுறை தினம் என்பதால் விடுதியில் இருந்து வெளியே செல்வது சுலபமாக இருந்தது சித்ராவுக்கு.
உற்சாகத்துடன் தன் பைக்கில் காத்திருந்தான் மிதுன். சித்ரா வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு.. ஒரு வீட்டிற்கு சென்றான்.