தன் மருமகளின் முகம் வாட பேசி விட்டாளே.. என எண்ணி வைதேகி சித்ராவை சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் சித்ராவின் மனதில் இருந்த எண்ணமோ வேறு.
“என்னதான் வைதேகி தனக்கு சமாதானம் சொன்னாலும் அவர் மனதிலும் தன் பேரனையோ பேத்தியையோ கொஞ்ச வேண்டும் என்று ஆசை இருக்கும் தானே.. இதை எப்படி இவ்வளவு நாட்கள் யோசிக்காமல் இருந்தேன்..” என எண்ணிக் கொண்டிருந்தாள் சித்ரா.
ஒரு வேளை செழியனும் தன்னிடம் இருந்து விலகிச் செல்ல இதுதான் காரணமோ.. என யோசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
“அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி என்னால நடந்துக்க முடியாது.. இதுக்கு ஒரே வழிதான் இருக்கு..” என ஒரு முடிவெடுத்தாள் சித்ரா.
வைதேகியும் சத்யநாதனும் செல்வி வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். செல்வியை பார்க்க என சித்ராவிடம் காரணம் சொன்னாலும் பேரனையும் பேத்தியையும் பார்க்க ஆசை என்பது சித்ராவுக்கு புரியாமல் இல்லை.
சித்ராவிடம் இருந்து விலகியிருக்க எண்ணி.. தினமும் நெடுநேரம் கழித்து திரும்பி வரும் செழியன்.. அன்று சீக்கிரமாக வந்தான்.
வைதேகி அவனிடம்.. “வேலை.. வேலைனு இருக்காத.. சித்ரா இங்க தனியா இருக்கா.. நேரத்துக்கு வீடு வந்து சேரு..”என்றார்.
சரியென தலையசைத்தான் செழியன்.
ஏற்கனவே மனதில் இருந்த பிரச்சனைகளில் இருந்து மீள வழியறியாது செழியன் இருந்த வேளையில்.. பணியிடத்திலும் சில பிரச்சனைகள் சேர்ந்து மனதில் பெரும் பாரத்தை சுமந்து கொண்டிருந்தான்.
கட்டிலில் அமர்ந்து கண்மூடி இருந்தான் செழியன். அவன் முன் வந்த சித்ரா.. “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றாள்.
“என்ன அதிசயமா இருக்கு..” என மனதில் நினைத்தபடியே அவளை பார்த்தான் செழியன்.
“எனக்கு டிவோர்ஸ் வேணும்..” என்றாள் சித்ரா.
“என்ன திடீர்னு..” என தன் வேதனையை மறைத்து சற்று நிதானமாக கேட்டான் செழியன்.