குழந்தை போல் சிரித்துக் கொண்டிருந்த அவள் முகம் கண்டதும் சுற்றியிருந்த சூழ்நிலை கூட செழியனின் கவனத்தில் இல்லை.
அங்கே ஆர்த்தி சித்ராவை முறைத்தபடி.. “நீ பேசாத..” என்றாள்.
“சாரி.. சாரி.. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. ஹாஸ்பிட்டல் போய்ட்டு இப்பத்தான் வந்தேன்.. அண்ணி தான் மண்டபத்தில இருந்து கிளம்பிட்டீங்கனு சொன்னாங்க.. அதான் நேரா இங்க வந்தேன்..” என ஆர்த்தியை சமாதானம் செய்து கொண்டிருந்தாள் சித்ரா.
சில நொடிகளில்.. ஆர்த்தி.. “சரி அம்மாவுக்கு இப்ப எப்டி இருக்கு..”என கேட்டாள் லேசான முறைப்புடன்.
“ம்.. இப்ப பரவாயில்லை..” என்ற சித்ரா மீண்டும் குழந்தையுடன் விளையாடத் தொடங்கினாள்.
“சித்து.. சாக்கி.. சாக்கி..”என கை நிறைய சாக்லேட்டுடன் குதித்தாள் குழந்தை. “சித்துக்கு..”என ஏக்கமான குரலுடன் கேட்டாள் சித்ரா.
குழந்தை மறுப்பாக தலையசைக்க.. “ஒன்னே ஒன்னு.. ப்ளீஸ்.. செல்லம்ல..” சித்ரா கெஞ்சிய அழகில் சாக்லேட்டை நீட்டியது குழந்தை.
ஒன்றை மட்டும் சித்ரா புன்னகையோடு எடுத்துக் கொள்ள.. ஆர்த்தியின் அம்மா அழைக்கும் சத்தம் கேட்டதும் அங்கிருந்து சென்றுவிட்டாள் சித்ரா.
செழியன் அசைவின்றி நின்றிருப்பதை பார்த்த ஆர்த்தி.. “டேய் என்ன அப்டி நின்னுட்டு இருக்க..”என கேட்டாள்.
என்ன பதில் சொல்வதென அறியாது நின்றிருந்தான் செழியன். செழியனின் பார்வை இருந்த திசையை கவனித்த ஆர்த்தி.. ”சித்ராவும் அம்மாவும் இங்கதான் பக்கத்து தெருவில இருக்காங்க டா.. இப்ப கொஞ்ச நாளா தான் சிரிக்கிறா.. அதுவும் பாப்பா கூட இருக்கும் போது தான்..” என்றாள் செழியன் எதுவும் கேட்காமலே அவன் மனம் அறிந்தவள் போல.
ஆர்த்தி சொன்னது மனதில் பதிந்தாலும்.. செழியனின் நினைவெல்லாம் சித்ராவை சுற்றிக் கொண்டு இருந்தது.
ஆர்த்தி செழியனிடம்.. “நீ இன்னும் அவ மேல கோபமா இருக்கீயா..”என கேட்டாள்.