தன் விரலில் இருந்த மோதிரத்தை பார்த்தபடியே நின்றிருந்த சித்ரா.. தன் மனதை திடப்படுத்திக் கொண்டு.. மோதிரத்தை கழட்டினாள்.
ஏனோ மனம் சற்று பாரமாக இருந்தது. அதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் சித்ரா. செழியன் கொடுத்த கம்மலை மாட்டிக் கொண்டு அறையில் இருந்து வெளிவந்தாள் சித்ரா.
வைதேகியும் சத்யநாதனும் தங்கள் பரிசாக புதுப் புடவை ஒன்றை கொடுத்தனர். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்ததும்.. “புது சேரியை கட்டிட்டு வா டா..” என்றார் வைதேகி.
செழியனையும் சித்ராவையும் கோவிலுக்கு சென்று வருமாறு பெரியவர்கள் கூற.. இருவரும் மகிழ்வுடன் கிளம்பினர்.
மோதிரம் இல்லா விரலின் மீது தன் பார்வை செல்வதை சித்ராவால் தடுக்க இயலவில்லை.
தன் உயிரின் ஒரு பாகம் தொலைந்ததை போன்றதோர் வலி சித்ராவின் நெஞ்சில் இருந்தது.
கோவிலில் இருந்து திரும்பியதும் அறைக்குள் வந்த சித்ரா.. கட்டிலில் அமர்ந்தபடி.. தன் விரலில் இருந்த மோதிரம் அணிந்த தடத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அறைக்குள் வந்த செழியன்.. “சித்து..” என அழைத்தான்.
அவன் குரல் கேட்டதும் பதற்றமாக எழுந்தாள் சித்ரா. அவள் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான் செழியன்.
தன்னை மீறி கண்கள் கலங்க.. செழியனை அணைத்தபடி அழுதாள் சித்ரா. எதுவும் பேசாமல் அவளை அணைத்துக் கொண்டான் செழியன்.
சற்று நேரத்திற்கு பின் அவளது அழுகை குறைந்ததும்.. கட்டிலில் அமரவைத்தான் செழியன். மெல்ல அவள் கையை தன் கையால் பிடித்துக் கொண்டு.. மோதிரம் இல்லா அந்த விரலை வருடியபடி.. “எதுக்கு சித்து.. கழட்டின..” என கேட்டான்.
செழியனின் மனதை வருந்தச் செய்திடக் கூடாது என எண்ணியதால் தான்.. தன் நினைவில் தோன்றியதை மறைத்தாள் சித்ரா.
அவள் பார்வையை புரிந்து கொள்ள தொடங்கி விட்டானோ.. என்னவோ.. செழியனுக்கு அவள் உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டு மருகுவது வருத்த.. அவளிடமே கேட்டு விட்டான்.