சித்ரா தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள கீழ் உதட்டை பற்களால் அழுந்தப் பற்றிய அந்தக் காட்சி.. செழியனை கடந்த காலத்திற்கு இழுத்துச் சென்றது.
❤❤
கல்லூரியின் முதல் நாள்..
பள்ளிக் காலத்திலிருந்தே நண்பர்களான செழியன்.. ஆர்த்தி.. மற்றும் மிதுன்.. ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் மீண்டும் இணைந்திருந்தனர்.
வகுப்பில் நுழையும் போதே கண்களில் ஒரு மிரட்சியுடன் நுழைந்த சித்ரா.. ஆர்த்தியின் அருகில் அமர்ந்தாள். அவர்கள் இருவரும் சற்று இணக்கமாக பேசிக் கொண்டனர். அப்போதே செழியனின் கவனத்தையும் ஈர்த்து விட்டாள் சித்ரா.
முதல் நாள் முழுக்க அறிமுகப் படலம் தான்.. அப்போது "எல்லாரும் உங்க பேர்.. உங்க அப்பா அம்மா பேர்..அப்பா அம்மா என்ன பண்றாங்கனு கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க.. அப்பத்தான் நேரம் போகும்.." என்றார் பேராசிரியர்.
ஒவ்வொருவராக எழுந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். சித்ராவின் முறை.. "என் பேர் சித்ரா.. அப்பா பேர் பாண்டியன்.. அம்மா பேர் கமலி.."என சொன்னாள் சித்ரா.
"அப்பா என்ன பண்றாங்க மா.."என இயல்பாக பேராசிரியர் கேட்க.. தன் இதழ்களை அழுந்த கடித்தபடி.. தலையை குனிந்து கொண்டாள் சித்ரா.
சில நொடிகள் கடந்த பின்.. "அப்பா தவறிட்டாங்க.."என்றாள் சித்ரா.
"சாரி மா.. நீ போய் உட்காரு.." என்றதும் தன் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள் சித்ரா.
அவளை சமாதானம் செய்வதாக எண்ணி.. ஆர்த்தி மெல்ல அவள் கைகளை பற்றிக் கொண்டாள். ஆர்த்தியின் முகம் நோக்கிய சித்ரா.. மெல்ல புன்னகைத்தாள்.. அதில் லேசான சோகம் வழிந்தோடியது.
அந்த சோகத்தை எப்படியாவது போக்கிவிட வேண்டும் என்ற ஏக்கம்.. செழியனுக்கு மட்டுமின்றி மிதுனுக்கும் இருந்தது.
அன்று மதிய உணவு இடைவேளையில்.. ஆர்த்தி தன் நண்பர்கள் செழியனையும் மிதுனையும் சித்ராவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.