நிலவுக் காதலன், பூமிக் காதலியை தன் ஒளியால் முழுதாய் அரவணைத்திருந்த அந்த இரவில் சென்னை மாநகரத்தில் பாதிக்கும் குறைவானோர் துயிலில் மூழ்கியிருந்தனர்.
சில்லென்றத் தென்றல் தேகத்தை தீண்டிச் செல்ல, அலைகளின் ஓசை, செவியை இதமாய் வருட, எதையும் இரசிக்கும் நிலைமையில் இல்லாமல் அந்த கடற்கரைப் பாறையின் மீது அமர்ந்திருந்தாள் மாயா.
அவளின் அருகில் அமர்ந்திருந்த ஆரவ் ஆதித்தியன் தன் கையிலிருந்தக் கடைசிக் கூழாங்கல்லை கடலை நோக்கி எரிந்தான். அப்பொழுது எழுந்தப் பேரலை அந்தக் கல்லோடுச் சேர்த்து அவனதுப் பொறுமையையும் தன்னோடு இழுத்துச்சென்று ஓடி மறைய, சிவந்திருந்த அவனது கண்கள் அலையை விட்டுவிட்டு தீர்க்கமாய் அவளை நோக்கின.
அவனதுப் பார்வையின் வீச்சு அவளை அவனை நோக்கித் திரும்பச் செய்யாமலிருக்கவேத் தன் வார்த்தைகளால் அவளைத் தன்னை நோக்கித் திருப்ப நினைத்தவனோ,
"சரி. நம்ப பிரிஞ்சிடலாம்." என்றான் சட்டென.அவனது இந்த சம்மதத்தை சற்றும் எதிர்பார்க்காமல் சிலையென ஸ்தம்பித்துப் போனாள் அவள். ஒரு வருடத்திற்கு முன்னால் இதே இடத்தில் 'நான் உன்னைக் காதலிக்கிறேன்..' என்றுக் கூறிய அதே இதழ்களால் இன்று இந்த வார்த்தையைச் சொல்ல வைத்த விதியின் மேலும் தன் மேலும் அளவுகடந்த வெறுப்பு ஏற்பட்டது அவளுக்கு.
அவள் கேட்க நினைத்ததை தான் அவன் சொன்னான். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது அவள் மனம்.
"பிரிஞ்சிடலாம். நம்ப பிரிஞ்சிடலாம்." என்றான் மீண்டும் கல்லை விட இறுக்கமான மனதோடு. இப்பொழுதுத் திரும்பினாள். நிலவின் ஒளியில் அவளதுப் பெரியக் கண்கள் கண்ணீரை ஏந்தி மின்ன, அவளதுப் பார்வை அவனது விழி வழி ஊடுருவி அவனது மனதில் இறங்கி எதையோத் தேட நினைத்தன, அதை அறிந்துக் கொண்டவன் போல் மீண்டும் கடற்கரையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான் ஆரவ்.
அவன் ஒருப் பெருமூச்சை உள்ளிளுக்க, அந்த கடற்கரையின் குளிர்ந்தக் காற்றால் அவனது தேகத்தைக் குளிர்வித்ததுப் போல் கொதிக்கும் அவன் மனதை குளிர்விக்க முடியாமல் போகவே மீண்டும் ஆற்றாமையில் வெடித்தான் அவன்.