ஆதிராவைப் பார்த்துவிட்டுத் தன் காரை மருத்துவமனை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான் ஆரவ்.
தற்போதிருக்கும் உண்மையை
அவள் மனதை ஏற்றுக்கொள்ளச் செய்திருந்ததால் சற்றே மனதின் பாரம் குறைந்ததுப் போல் உணர்ந்தான் அவன்.ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு விளங்கவில்லை. அன்றிரவு அவன் அனுப்பியக் குறுஞ்செய்திக்கு அவள் பதில் தெரிவிக்காவிட்டாலும் அவள் தான் அதைப் பார்த்திருந்தாளே.
எதிர்பார்த்ததுத் தான் நடந்திருக்கு. ஆனால் எதிர்பாராத முறையில் நடந்திருக்கு. இதில் இவள் இத்தனை உடைந்துப் போகும் அளவுக்கு புதிதாய் ஒன்றும் இல்லையே. எல்லாம் அவளுக்குத் தெரிந்தது தானே?என யோசித்தப்படி இருந்தவனை அவனது அலைப்பேசியின் சிணுங்கல் நிகழ்விற்கு கொண்டு வர, சிந்தனையிலிருந்து மீண்டவன், திரையில் ரவியின் பெயரைப் படித்ததும் வேகமாய் அழைப்பை ஏற்று, போனை காதிற்குக் கொடுத்தான்.
"ஹலோ எங்க டா இருக்க ஆரவ்?" ரவியின் குரலில் லேசானப் பதற்றம் இருந்தது.
"ஹாஸ்பிடல் தான் டா வந்துட்டு இருக்கேன். ஏன் என்னாச்சு?"
"அ.. அது மாயாக் கண்ணு முழிச்சிட்டாடா. கொஞ்சம் சீக்கிரம் வா." என அவன் கூறவும் ஆரவின் முகத்தில் பதற்றம் கலந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்ள,
"உடனே வரேன் டா." என்றவன் காரின் வேகத்தைக் கூட்டினான்.
அடுத்தப் பத்தே நிமிடங்களில், மருத்துவமனையை அடைந்தவன், நேராய் மாயா இருக்கும் புளோருக்கு நடையைக் கட்டினான்.
அவனைக் கண்டவுடன், "ஆரவ்.." என அழைத்த ரவியைக் கண்டுக் கொள்ளாமல் அவளின் அறைக்குள் நுழையப்போனவனைத் தடுத்தான் ரவி. அவனை முறைத்த ஆரவ்,
"என்ன டா? மாயா கண்ணு முழிச்சிட்டாள.. நான் போய் பார்த்துட்டு வரேன்." என்றவனின் கேள்வியைக் கேட்டவன், சற்றுத் தயங்கி,
"அ.. அதில்லை டா.. கண்ணு முழிச்சு ஒரு இரண்டு நிமிஷத்துலேயே மறுபடியும் மயங்கிட்டா டா." என நெற்றியை வருடியபடி அவன் கூற, ஆரவின் முகமே மாறிப்போனது.