அன்றிரவு மாயா அறைக்கு திரும்பும் போது, மணி பதினொன்றை தாண்டியிருந்தது.
எப்பொழுதும் அந்நேரத்திற்குள் உறங்கிவிடும் ஆரவ் உறங்காமல் புரண்டு புரண்டு படுத்திருப்பதைக் கண்டவள், எதுவும் பேசாமல் தன்னிடம் போய் படுத்துக்கொண்டாள்.
ஆயிற்றே. இன்றோடு வினையின் இறுதிச்சடங்கு முடிந்து முழுதாய் இரண்டு வாரங்கள் முடிந்திருந்தது.
ஏனோ அவர் தன் தந்தை என்ற ஒரு விடயத்தை தவிர அவரைப்பற்றி ஒன்றும் அறிந்திராத மாயாவுக்கு அதிலிருந்து மீள சற்று சுலபமாய் இருந்தாலும், ஆரவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் அவர் இறப்பிற்கு தானும் ஒரு காரணமோ என்ற எண்ணம் அவனை உறுத்திக் கொண்டே இருந்தது.
இந்த இரண்டு வாரங்களாய் அவனது இடம் சோஃபாவில் இருந்து மெத்தைக்கு மாற்றப்பட்டிருந்ததால் அவன் உறங்காமல் இருப்பதை மாயாவால் கண்டுக்கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை.
அவன் மேல் ஏன் தனக்கு கோபம் என அவள் காரணத்தையே மறந்து போயிருந்தாலும், விடாப்பிடியாய் கோபத்தை மட்டும்
இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள்.ஆனாலும் சில நேரங்களில் அவனை அறியாமல் அவன் எங்கோ வெறித்துக் கொண்டிருப்பதையும், தட்டில் வைத்த உணவை ஏதோ யோசைனையில் தடவிக் கொண்டிருப்பதையும் காண்பவளுக்கு கோபம் எல்லாம் மறந்து அச்சோ என்றாகிவிடும். இப்படியே முதல் ஒரு வாரத்திலேயே அவன் மேல் கோபப்படுவது நியாயமில்லை என உணர்ந்தவள் அவன் நிலையறிந்து எதுவும் அவனிடம் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அவளால் அவன் மனதில் இருப்பதை உணர முடிந்தது.
இன்றும் அதே போல் அவன் உறங்காமல் இருப்பதைக் கண்டு மனம் கேளாமல் எழுந்தமர்ந்தவள், அருகிலிருந்த சிறிய விளக்கை எறியச்செய்தாள்.
"ஆரவ் தூக்கம் வரலையா? பசிக்குதா?" என்றாள். கீழே அவன் ஒழுங்காய் சாப்பிடவில்லை என்பதை அறிந்திருந்தாள் அவள்.