உள் அறையில் இருந்த மாயாவிற்கு சில வினாடிகள் வரை கேட்ட பேச்சு சத்தம் திடுமென மறைந்து ஏதோ ஒன்று விழுவது போல் பலமாய் சத்தம் கேட்க, அதன் பிறகு அங்கு வெறும் அமைதிக் குடிக்கொள்ளவும், தாராவிற்கு எதாவது ஆகிவிட்டதோ என்ற பயத்தில், தாராவின் சொல்லை மீறி அதற்கு மேலும் அமைதி காக்காமல் வேகமாய் கதவைத் தட்டினாள் மாயா.
"தாரா.. தாரா.. கதவைத் திற.. என்னாச்சி தாரா.. ஆதிரா ப்ளீஸ் அவளை ஒன்னும் பண்ணிடாத."
நெஞ்சம் பதைப்பதைக்க கத்தியவளுக்கு, தாராவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை."எதாவது பேசு தாரா.. உனக்கு ஒன்னுமில்லைல? கதவை திற ப்ளீஸ்.." என மீண்டும் கத்தினாள்.
இப்பொழுது அவளை நெருங்கிடும் ஒரு காலடி சத்தம் அவளுக்கு கேட்கவும் அது தாராவென்ற நினைப்பில், "தாரா கதவை திற சீக்கி.." வாக்கியத்தை சொல்லி முடிப்பதற்குள், திடுமென பின்னாலிருந்து வந்த ஒரு கரம் அவளது வாயை அடைத்தது.
அவள் சுதாரித்து திமிருவதற்குள் தரதரவென்று பால்கனிக்கு இழுக்கப்பட்டவள் துள்ளி விடுப்பட முயல, "மாயா தயவு செஞ்சு அமைதியா இரு." என்ற அவளது தந்தையின் அதட்டலில் திகைத்து உரைந்தாள்.
"வினு ஏன் இப்படி பண்ற? தாராக்கு எதாவது ஆகிடப்போகுது. எனை விடு." என அவள் அழுகையுடன் கெஞ்சியும் அவளது கையை விடாமல் இருக்கமாய் பற்றியிருந்தார் அவர்.
சரியாய் அவ்வறையின் கதவு திறக்கப்படும் சத்தம் அவளுக்குக் கேட்க, அவள் கத்துவதற்கு வாய் திறக்கும் முன்னால், கண்ணீருடன் அவளிடம் கையெடுத்து கும்பிட்டவர், அழுகையில் விசும்புபவளின் வாயை மீண்டும் பொத்தினார்.
மழையின் ஓலத்தைத் தாண்டி வினையின் ஆழமான மூச்சுக்காற்றின் சத்தம் அந்த பால்கனியை விட்டு தாண்டாமல் இருப்பினும், 'டொக் டொக்' என்ற ஹை ஹீல்ஸின் சத்தம் அறையுனுள் நுழைந்ததை இருவராலும் கேட்க முடிந்தது..
அது வேறு யாருமில்லை ஆதிரா தான். அவள் இருந்த நிலமையில் அறையை முழுதாய் அலசாமல் மேலோட்டமாய் ஓர் பார்வை பார்த்து விட்டு, யாருமில்லை என்றதும் போதையில் பிரம்மையாய் இருக்குமோ என்ற எண்ணத்தோடு மேற்பார்வையோடு தேடுதலை கைவிட்டவள், அவ்வறையை விட்டு வெளியேறும் முன் திடுமென ஒரு சத்தம் கேட்டு நின்றவளின் பார்வை பால்கனியை நோக்கிப் பயணித்தது.