மூடியிருந்த அவள் விழிகள் மெல்ல திறக்கவும் அவள் எங்கே இருக்கிறாள் என்றே அவளுக்கு பிடிப்படவில்லை.
அவள் கண்கள் சுற்றி முற்றிப் பார்க்க, "ஆதிரா ஆர் யூ ஓகே?" என்ற மாயாவின் குரல் கேட்டதும் அவள் புறம் திரும்பியவளுக்கு அவள் மயங்கும் முன் அவள் கண்ட அகோரமான மாயாவின் முகம் நினைவு வர, அலறிக் கொண்டு எழுந்தவள், "என்னை விட்டுடு.. என்னை விட்டுடு.. ப்ளீஸ் என்னை விட்டுடு.." என கண் காது என அனைத்தையும் இறுக்க மூடிக்கொண்டு, குரல் நடுங்க பிதற்றியவளை புரியாமல் விழித்துக்கொண்டு இருந்தாள் மாயா.
"என்ன ஆச்சி ஆதிரா? நான் மாயா தான்! ஏன் இப்படி பயப்படுற? உனக்கு ஒன்னும் இல்லை. நீ சேப்பா தான் இருக்க. கண்ணை திறந்து என்னை பாரு." என மாயா பதறி மென்மையாய் அவளை சமாதானப் படுத்தவும், அவள் அரண்டு இன்னும் ஒடுங்கி அமர, எழுந்துச் சென்றவள் வேகமாய் ஆரவை அழைத்து வந்தாள்.
அவனும் என்ன நடந்தது என தெரியாமல் குழம்பி, தண்ணீர் குவளையோடு, அவள் அருகில் அமர்ந்தவன், "அம்மு என்ன ஆச்சி? இங்க பாரு. உனக்கு ஒன்னுமில்லை. நான் மாயாலாம் உன் கூட தான் இருக்கோம்." என அவள் தோளில் அவன் அழுத்தம் கொடுக்கவும், அவன் ஸ்பரிசத்தில் மெல்ல கண்களை திறந்தவள், ஆரவ் நீட்டிய குவளையை வாங்கி, அதை ஒரே மொடக்கில் மொத்தத்தையும் தொண்டையில் சரித்துக் கொள்ள, ஆரவும் மாயாவும், ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.
அவள் தண்ணீரை அருந்தி சற்று நிதானமானப் பிறகே, "என்ன ஆச்சி அம்மு? எதை பார்த்து இப்படி பயந்து போய் இருக்க?" என அவன் நிதானமாய் வினவவும், அவளது மனக்கண்ணில் அவள் இங்கு வந்தது முதல் என்ன என்ன நடந்ததோ அத்தனையும் ஓடி மறைய, ஒரு முறை அவள் உடல் நடுங்கி அடங்கியது.
அவள் அமைதியைக் கண்ட மாயா,
"நான் வந்தப்போ நீ ரூம்ல மயங்கி கிடந்த ஆதிரா.. மயக்கம் போடுற அளவுக்கு என்ன நடந்தது?" என அக்கறையுடன் கேட்க, மாயாவின் சொற்களை அரண்டு போய் கேட்டவளின் விழிகள் மறந்துக் கூட அவளை ஏறிடவில்லை.