மொத்த தைரியத்தையும் திரட்டிக்கொண்டு தரையை நோக்கி குதித்தவன், பலமாய் விழுந்தான். ஆனால் அவன் நினைத்ததுப் போல் உடல் முழுதும் வலி எடுக்கவில்லை. உயிர் இன்னும் உடலை விட்டு பிரிய வில்லை. அதிர்ந்து மெதுவாய் கண்களை திறந்து பார்த்தான். அவன் இன்னும் அதே மொட்டை மாடியின் மதில் சுவர் மேல் தான் நின்றுக்கொண்டு இருந்தான்.
இதெப்படி சாத்தியம்? கேள்வி எழுந்த நேரம் மீண்டும் அவனது மனம் குதிக்க நினைக்க, முன்னாலிருந்து யாரோ தள்ளியது போல் பின்னே சென்று தரையில் வீழ்ந்தான் ஆரவ்.
நடந்தவற்றை சுதாரிப்பதற்குள், மீண்டும் விழுந்த இடத்திலிருந்து அதிவேகத்தில் தூக்கி வீசப்பட்டான்.
சுவரில் மோதிய வேகத்தில் அவனது முதுகில் மின்னல் வெட்ட, வலியை சமாளித்து தட்டு தடுமாறி எழுந்து நின்றவனுக்கு ஒரு கணம் பிடித்தது. என்ன நடந்தது என யோசிப்பதற்கே.
ஏதோ அசாதாரணமாய் இருப்பதை அவனால் உணர முடிந்தது. வெளியே மாயா நிற்பதற்கான அசுவாட்டமே அவனுக்கு தெரியவில்லை.
வேகமாய் மாடியின் மூடிய, கதவினை திறந்து பார்த்தான். யாரும் அங்கில்லை!
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மாயா எங்கே? என்ற கேள்வியுடன் சுற்றி நோட்டமிட்டவனுக்கு, கீழே கிடந்த உடைந்த பீங்கான் துண்டுகள் மட்டுமே கண்ணில் பட்டன.
வேகமாய் அதில் ஒரு துண்டை அவன் கையில் ஏந்த, அவனது நோக்கம் தெரிந்தது போல் சட்டென அது காற்றில் கரைந்து போனது.
மீண்டும் அவன் தூக்கி விசப்பட்டான். அவன் உள்ளே வந்து விழுந்ததும் கதவு அரைந்து சாத்திக்கொள்ள, இப்பொழுது இருள் நிறைந்த அந்த மாடியினில் ஒரு மெல்லிய வெளிச்சம் தோன்றியது. அதன் கீழ் மாயா.
காட்டில் தொலைந்தவனுக்கு திடுமென வழி தெரிந்ததுப் போல் இருந்தது அவனுக்கு. மனதினில் அப்பொழுதே நிம்மதி பரவ, "மாயா.." என்றப்படி அவளை நெருங்க நினைத்தவன், ஏதோ ஒரு உந்துதலில் அப்படியே நின்றான்.