இரவு மணி நான்கை தொட்டதும், மாயாவுக்கு முளிப்பு தட்டியது.
உசும்பியவள் மணியை பார்க்க, அது நான்கு என்பதை கண்டவுடன் அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள்.
'மூன்றைக்கு அலாரம் வச்சிருந்தோமே..' என எண்ணியப்படி மெத்தையை அலசி தன் கைப்பேசியை எடுத்தவள், அது சார்ஜ் இல்லாமல் அணைந்து கிடப்பதைப் பார்த்து உச்சிக்கொட்டினாள்.
வேகமாய் எழுந்து அறையை விட்டு வெளியேறி, "வினு நான் தான் தூங்கிட்டேன்.. நீயாவது எழுப்பிருக்கலாம்ல?" என்றப்படி தன் தந்தையின் அறைக்கதவை திறந்தவளுக்கு யாருமின்றி வெறுமையாய் இருந்த அறை தோற்றமளிக்க, 'எங்க இந்த வினுவை காணோம்.. கரென்ட் வேற இல்லை.. இன்னைக்குனு பார்த்து இப்படியா மழை பெய்யனும்..' என புலம்பியப்படி ஹாலுக்கு வந்து எமெர்ஜென்ஸி லைட்டை ஆன் செய்தவளின் பார்வையில் தரையில் கிடந்த இருவரின் உடல் அகப்பட, பயத்தில் அலறியவள் அப்படியே கீழே விழுந்தாள்.
இது கனவா நினைவா எனக் குழப்பம் கலைந்து, தன் கண் கண்ட காட்சியினை ஜீரணிக்கவே அவளுக்கு சில நிமிடங்கள் பிடிக்க,
படபடக்கும் மனதுடன் சுயநினைவு அற்ற தன் தந்தையின் அருகில் சென்று, அவரை தட்டி எழுப்ப முயன்றாள் மாயா.அவர் எழுந்திரிக்காமல் போகவும் பயந்தவள், டீப்பாயிலிருந்த தண்ணீர் பாட்டிலை எக்கி எடுக்க, அப்பொழுதே அங்கு இருந்த இன்னொரு உருவம் ஒரு பெண் என்பதையும் அதுவும் தன்னை போலவே இருக்கும் ஒரு பெண் என்பதையும் கண்டவளுக்கு அதிர்ச்சியில் ஒன்றுமே ஓடவில்லை.
இருப்பினும் குழம்பி அப்படியே நிற்காமல், தண்ணீர் குவளையை கையில் சரித்து நடங்கும் கைகளுடன் அப்பெண் மீது தெளித்தாள் மாயா.
சில நிமிட போராட்டத்திற்கு பிறகு மெதுமெதுவாய் கண்விழிக்க தொடங்கினாள் அவள்.
விழித்தவளுக்கு வினாடிகள் பிடித்தன, என்ன நடந்தது? எங்கே இருக்கிறோம்? என்று புரியவே.
மாயாவோ "யாரு நீ? என்ன ஆச்சு?" என கேள்விகளாய் அடுக்க, முதல் முதலாய் தன்னைப் போலே இருக்கும் மாயாவை கண்டதில் அவள் சற்றே திகைத்திருந்தாலும், முன் பின் தன்னை யாரென்றே தெரியாத மாயாவின் மனநிலை இப்பொழுது எப்படி இருக்கும் என அவளால் உணர முடியவே, மெதுவாய் எழுந்து அமர்ந்தவள் மௌனமாகவே இருந்தாள்.