அவளது அந்த வார்த்தைகளுக்குப் பிறகு மாயா ஆரவின் புறம் திரும்பக் கூடவில்லை. யாரிடமும் தன் முக வாட்டத்தைக் காட்டாமல் லாவகமாய் அவள் மறைத்தாலும் ஏதோ சரியில்லை என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தனர். தனிமையில் கண்ணீரும், அனைவரின் முன்பாய் சிரிப்புமாய் இருந்தவளின் ஒவ்வொரு செயலையும் ஆரவ் துள்ளியமாய் கவனித்தப்படித் தான் இருந்தான். அதுவும் அவன் தன்னைச் சுற்றி இருக்கும் பொழுது, பிடிவாதமாய் அதிகப்படியாய் சிரித்துச் சிரித்துப் பேசினாள் அவள்.
ஆனால் கண்களுக்கு எட்டாத அவளின் சிரிப்பு வெறும் நடிப்பென்பதை அவளின் அவன் அறியாமல் இல்லை.
ரவியின் பிளாட் கீழ் தளத்தில் தான் இருந்தது. அவனின் மூலமாய் தான் அதேக் கட்டிடத்தில் இந்தப் பிளாட்டை வாடகைக்கு எடுத்திருந்தான் ஆரவ்.
ஆரவின் பிளாட்டில் இரண்டு நாள் தங்கியப் ப்ரியாவும், துருவும் ரவியின் பிளாட்டிலும் வந்தக் கையோடு இரண்டு நாள் தங்கிவிட்டுப் போவதாக முடிவுச் செய்திருந்தார்கள்.
அதற்கு காரணம் வேறொன்றும் இருந்தது. எலியும், பூனையுமாய் இருப்பவர்களின் பிரச்சினை தீரக் கண்டிப்பாய் அவர்களுக்கு தனிமை அவசியம். பேச வேறாள் இல்லை என்றப் பட்சத்தில் இருவரும் எத்தனை நாளுக்கு முகத்தைத் திருப்பிக்கொண்டு இருக்க முடியும் என்றெண்ணியவர்கள் பகலில் சென்றால் ஆரவும் தங்களுடனே வரக் கூடும் என்றுக் கணித்து சரியாய் இரவில் விடைப்பெற்றுக் கிளம்பிவிட்டனர்.
அதுவும் இதுவரைக் கிடைத்திடாதத் தனிமை இனிக் கிடைத்தால் அடிப்பிடிச் சண்டை வந்து விடுமோ என்று யோசித்து ரியாவை மட்டும் அவர்களின் பொறுப்பில் ஒப்படைத்துச் சென்றனர். அவள் முன் கண்டிப்பாய் இருவரும் சண்டைப் போட முடியாதல்லவா?
டீவியில் ஷின்சான் ஓடிக்கொண்டிருக்க, அதைப் பார்த்து சில்லரைக் கொட்டியதுப் போல் அழகாய் நகைகத்துக் கொண்டிருந்தாள் ரியா. அவளுக்கு அப்படி இப்படியென்றுப் போக்குக் காட்டித் தட்டிலிருந்த உணவை ஊட்டிக் கொண்டிருந்த மாயாவும், இடையிடயே ரியாவோடுச் சேர்ந்துச் சிரித்தப் படி ஓரிரு வாய் எடுத்துத் தானும் உண்டாள்.