Episode 17

396 6 0
                                    


மாலை 7 மணி.

புவி தன்னுடைய பெட்டிக்குள் துணிகளை அலங்கோலமாக திணித்து கொண்டிருந்தான். கல்லூரியில் வருடத்தின் இறுதி செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பிக்க இரண்டு வாரங்கள் உள்ளது. அந்த Study லீவில் கல்லூரி விடுதியில் தங்க பிடிக்காமல், ஊருக்கு செல்ல முடிவெடுத்து, இரவு 11 PM ட்ரெயின் ஐ பிடிக்க ஆயத்தமாகி கொண்டிருந்தான் புவி.

ரூம் மேட்டை காணவில்லை. அவன் வழக்கம் போல வேறு ரூமில் இருக்கக்கூடும்.

இந்த தனிமை புவிக்கு புதிதல்ல. கடந்த ஆறு மாதமாக நாட்கள் இப்படித்தான் கழிகின்றன.

இந்த கல்லூரியில் சேரும் போது என்னென்ன கனவுகள்! என்னென்ன ஆசைகள்!

ஒருவரும் சீண்டாத, ஒதுக்கப்பட்ட வாழ்க்கை அவன் கனவிலும் எதிர்பார்க்காத ஒன்று! நினைக்கும் போதே கண்களில் துளி கண்ணீர் உண்டாகி கலங்கியது. இருந்தும் அவனுக்கே உரித்தான மன உறுதி உண்டாகி, தெம்பை கொடுத்தது.

சூட்கேஸை பூட்டிவிட்டு, பாக்பேக்கில் லேப்டாப், சில ஆங்கில நாவல்கள், charger என விட்டு போன பொருள்களை அள்ளி போட்ட புவியின் மொபைல் போன் அலறியது.

"ஆதி காலிங்" என மொபைலின் திரையில் ஒளிர, புவிக்கு என்ன செய்வது என புரியாமல் சில நொடிகள் குழம்பி சிலையாக நின்றான்.

பிறகு அவனே போனை எடுத்து, "...ஹலோ.." என்றான்.

அவனையும் அறியாமல் குரல் பிசிறாகி உடைந்து கரகரப்பாக வெளிவந்தது. அவனுடைய இதயமோ அடித்துக்கொண்டது.

'இவன் எதற்கு எனக்கு கால் செய்தான்?' என கேள்வி ஒரு பக்கம் வந்தாலும், மறுபக்கம் அவனுக்கு வருத்தமும் அழுத்தியது.

ஆதி, "புவி! நான் ஆதி பேசுறேன்.."

அவன் குரலில் கொஞ்சம் பரபரப்பும், கொஞ்சம் கெஞ்சலும் தென்பட்டது.

"சொல்லு..!"

"உன் கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.. வீட்டுக்கு வர்றியா..?"

"என்ன விஷயம்.. ? நான் ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன்.. போன்ல சொல்லு!"

தள்ளி போகாதே (Don't Leave Me Dear!) Donde viven las historias. Descúbrelo ahora