இந்த அம்மையார் எதற்காக இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார் என்று ஸைனபுக்கு விளங்கவில்லை.
ஸைனப் அல் அம்ரீயையும் ஹம்தாவையும் திரும்பிப் பார்த்தாள். அவர்களிருவருமே அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"ஸைனப் தானே நீ? ஸைனப் அல் பஷரீ என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது நீ தானென்று எப்படித் தெரியாமல் போனேன்?" என்று அவளது கையைப் பற்றிக் கொண்டு ரிழா கேட்க, ஆமென்று மெதுவாகத் தலையசைத்தாள்.
"என்னைத் தெரியுமா?" என்றார் கண்களைத் துடைத்துக் கொண்டு.
எச்சிலை மென்று விழுங்கி விட்டுத் தெரியாது என்று தலையசைத்தாள். ரிழா தனது மகளைத் திரும்பிப் பார்த்து,
"ஸைனப் நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேனல்லவா? ஸைனப் பின்த் அப்துல்லாஹ் என்று? நான் அடிக்கடி சொல்வேனல்லவா? அது இவள் தான். கடைசியில் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன். நீ உயிருடன் இருக்கிறாய்!" என்றவர் ஸைனபைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.
ஆனால் அவளுக்கோ என்ன சொல்கிறார் இந்தப் பெண்? என்று தான் விளங்கவில்லை. "நான் உன்னுடன் நிறையக் கதைக்க வேண்டும். எமது வீட்டுக்கு வருகிறாயா?" உணர்ச்சி பொங்க அன்பாக அழைத்தவரிடம் மறுக்க மனம் வரவில்லை.
மேலும் இங்கே என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளைப் பிடுங்கித் தின்றது.
"இன் ஷா அல்லாஹ் நாளை காலை வருகிறேன். சரி... எனக்கென்றால் நீங்கள் யாரென்று தெரியவில்லை" என்றாள் சங்கடத்துடன்.
"நான் அனைத்தையும் உன்னிம் நாளை கூறுகிறேன். உன்னைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி மகளே" என்று மீண்டும் அவளை முத்தமிட்டவர் தனது மகளை அழைத்துக் கொண்டு சென்றார்.
ரிழாவின் முகம் பல ஔிவிளக்குகள் ஒருங்கே சேர்ந்தாற் போல மின்னிக் கொண்டிருந்தது. தங்களை அழைத்துச் செல்வதற்காக வெளியே நின்றிருந்த மகனிடம் தனது மகிழ்ச்சியை வெளிக் காட்டாதிருக்கப் பெரும் பாடுபட்டார்.
YOU ARE READING
ஔியைத் தேடி...✔
Spiritualஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!