வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த அனைவரும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தி விட்டுச் சென்றிருந்தனர். இறுதியில் அது மணமக்கள் தங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நேரமாக அமைந்தது. மண்டபத்துக்கு வெளியில் சில கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தான் அணிந்திருந்த கபில நிற நீண்ட உடையை ஒரு முறை கண்ணாடியில் பார்த்தாள் ஸைனப் அல் பஷரீ. அதில் நிலத்தைத் தொட்டுக் கொண்டிருந்த பகுதியை வெள்ளி நிற இழையொன்று கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது.
புன்னகைத்து விட்டுத் தனது அபாயாவையும் ஹிஜாபையும் அதன் மீது அணிந்து கொண்டாள். ரிழாவும் மஸ்லமாஹ்வும் ஏதோ கதைத்தவாறு கூப்பிடு தூரத்தில் நிற்பது தெரிந்தது. அவர்களை நோக்கி வந்தவள், 'போவோம்' என்பது போல மஸ்லமாஹ்வைப் பார்த்தாள்.
தலையசைத்தவன் பெண்களிருவரும் பின்தொடர, மண்டபத்தை விட்டு வெளியேறினான். நெருங்கிய நட்புக்கள் மட்டுமே எஞ்சியிருக்க, கஹ்வாவை உறிஞ்சியாறு அவர்கள் கதை பேசிக் கொண்டிருந்தனர்.
ரயீஸா இறுதியாக ஒரு முறை தனது வளர்ப்பு மகளைத் தழுவி முத்தமிட்டு விட்டுத் தனது வீட்டுக்குப் பறப்பட்டார். அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. திறமைகளைக் கண்டு அவர் வியந்து பார்த்த இருவர் தான் மஸ்லமாஹ்வும் ஸைனபும்.
இத்தனை சிறிய வயதில் எவ்வளவு திறமை! என்று ஆச்சர்யப்படுவார் ரயீஸா. அவர் மனதைக் களிப்பூட்டும் வகையில் இப்போது மஸ்லமாஹ்வும் ஸைனபும் கைகளைக் கோர்த்தவாறு அடுத்தடுத்து நின்றிருக்கவே அவரது புன்னகை மேலும் மேலும் விரிந்தது.
ஒருவாறு அனைத்தையும் முடித்துக் கொண்டு அனைவரும் வீட்டைச் சென்றடைந்த போது அஸர் அதான் ஓய்ந்து அரை மணி நேரம் கடந்திருந்தது. முதலில் தொழுகையை நிறைவேற்றியவர்கள் ஓய்வாக அமர்ந்து நிம்மதியாக மூச்சு விட்டனர்.
ஒரு வாரமாகவே அனைவருக்கும் ஓட்டம் தான். அதனால் உடலில் ஏற்பட்ட களைப்புக்கும் சோர்வுக்கும் மருந்தாக உள்ளத்தில் உவகை நிறைந்திருந்தது. இரவு மெல்ல நகர்ந்து கொண்டிருக்க, மஃரிப் தொழுகைக்காக மஸ்ஜிதுக்குச் சென்ற சகோதரர்களிருவரும் இஷாவுடன் திரும்பியிருந்தனர்.
YOU ARE READING
ஔியைத் தேடி...✔
Spiritualஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!