இரவானதும் விண்ணிலிருந்து ஊற்றுக் கிளம்பிற்று. நீண்ட நாட்களுக்குப் பின்னர் மழையைக் காணும் மகிழ்ச்சியோ என்னவோ பலகைக் கதவு ஆசைந்தாடிக் கொண்டிருந்தது.
அதை அடைத்து மூடிய மஸ்லமாஹ் தனது தாய் நீட்டிய தேநீர்க் கோப்பையைப் பெற்றுக் கொண்டு கதிரையில் அமர்ந்தான். அதை இரசித்தவாறே உறிஞ்சிக் கொண்டிருக்கையில் அல்அம்ரீயும் வந்து அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
அவர்களது சமையலறையினுள் இன்னுமொரு சிறிய அறை இருந்தது. அதில் தான் பொருட்களையெல்லாம் சேமித்து அடுக்கி வைத்திருந்தனர். ரிழாவுடன் இருவரும் கதைத்தவாறிருக்க, அவ்வறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் அல்பஷரீ.
வெளியே வந்தது தான் தாமதம், தடாரென கதவை மீண்டும் சாத்திக் கொண்டு உள்ளேயே சென்றாள். கதவொன்று திறந்து மூடும் ஓசையில் மூவரும் திரும்பிப் பார்த்தனர்.
அவள் உள்ளே இருந்தது ரிழாவுக்கு மட்டுமே தெரியும். மற்ற இருவரும் விழித்தனர். "என்ன நடந்தது? காற்று இன்று அதிகமாக உள்ளதே!" என்றவாறு எழுந்த மஸ்லமாஹ் கதவை நோக்கிச் சென்றான்.
அல்அம்ரீ தனது தேநீரை சுகமாக உறிஞ்சிக் கொண்டிருந்தாள். ரிழாவுக்கு உடனே மூளையில் பொறி தட்ட, வேகமாக அவனது சட்டையைப் பிடித்து அவனை நிறுத்தினார்.
"ஏன்?" என்றவாறு அவன் திரும்ப,
"நீ ஒன்றும் போக வேண்டாம்" என்ற ரிழா சமையலறையிலுள்ள கதிரையொன்றில் வைக்கப்பட்டிருந்த முந்தானையை எடுத்துக் கொண்டு அக்கதவை நோக்கிச் சென்றார்.
அல்அம்ரீயும் மஸ்லமாஹ்வும் அவரைப் பார்த்து முழித்துக் கொண்டிருக்க, ரிழா சென்று அவ்வறையின் கதவை இலேசாகத் திறந்து அந்த முந்தானையை உள்ளே போட்டு விட்டு கதவை மூடிக் கொண்டே வந்தார்.
"என்ன நடக்கிறது?" என்று கண்களை உருட்டியவாறே அமர்ந்து மீண்டும் தேநீரை உறிஞ்சினான் மஸ்லமாஹ்.
அப்போது அல்பஷரீ அவ்வறையின் கதவைத் திறந்து கொண்டு வருவதை மஸ்லமாஹ்வும் அல்அம்ரீயும் பேய் வருவது போலப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
YOU ARE READING
ஔியைத் தேடி...✔
Spiritualஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!