42 ஷீலாவின் திட்டம்
முதன் முறையாய் தன் இதயத்தில் ஏதோ கெடுதலாய் உணர்ந்தான் மாமல்லன். அவனுக்கு இளந்தென்றலை நினைத்து கவலையாய் இருந்தது. யார் அந்த பர்தா அணிந்த பெண்? அவள் தேடி வந்தது யாரை? ஒருவேளை அவள் வந்தது அவனுக்காக என்றால், அதைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனால் அதை கையாள முடியும். அவனது மனதில் இன்னொரு சந்தேகமும் எழுந்தது. வந்திருந்தது உண்மையிலேயே பெண் தானா? அப்படி என்றால், எப்படி இவ்வளவு சுலபமாய் நான்கடி உயரமுள்ள சுவற்றை அவ்வளவு அனாவசியமாய் தாண்டி குதிக்க முடியும்? வந்திருந்தது பர்தா அணிந்த ஆணாக இருக்குமோ?
அப்போது, உணவு தட்டுடன் உள்ளே நுழைந்த இளந்தென்றலை பார்த்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் மாமல்லன்.
"சாப்பிட வாங்க"
"ம்ம்ம்ம்" என்பதைத் தவிர வேறு எதுவும் கூறாத மாமல்லனிடம் மாறுதல் இருந்ததை கவனித்தாள் அவள்.
"என்னாச்சுங்க?"
"என்ன ஆச்சு? ஒன்னும் இல்லயே..." என்றான்.
அவன் கேட்காமலேயே அவள் அவனுக்கு ஊட்டி விட்ட பொழுதும், அவன் முகத்தில் அதற்குண்டான குதூகலம் காணப்படவில்லை. ஜன்னலின் மீது பார்வையை வைத்தபடி உணவை உண்டான். அவன் மனம் நிம்மதி இழந்து விட்டிருந்தது. அவன் அமைதியாய் சாப்பிட்டதை பார்த்த இளந்தென்றல், மேலும் குழம்பினாள். திடீரென்று அவனுக்கு என்ன ஆகிவிட்டது? சற்று நேரத்திற்கு முன்பு வரை அவளிடம் குழைந்து கொண்டு இருந்தானே...! அவளது முகத்தில் தெரிந்த கவலைக் குறியை கவனித்த மாமல்லன், அவளை மேலும் கவலையில் ஆழ்த்த விரும்பாமல், அவள் விரலை லேசாய் கடித்தான்.
"என்ன என் முகத்தையே வெறிச்சு பார்த்துகிட்டு இருக்க?" என்றான்.
"நீங்க என்ன யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க? சட்டுன்னு ஏன் உங்க முகத்துல ஒரு கலவரம் தெரியுது?"
சில நொடி தாமதித்த மாமல்லன்,
"ஒன்னும் இல்ல... அம்மாவை நினைச்சுகிட்டேன்" என்று இளந்தென்றல் மறுக்க முடியாத பொய்யை கூறினான். அப்படி கூறினால், நிச்சயம் இளந்தென்றல் அதை நம்புவாள் என்று அவனுக்கு தெரியும்.
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...