திருமண வேலைகளில் அமர்க்களப் பட்டது ராஜசேகர் வீடு. வீட்டில் நடக்கும் முதல் திருமணம், எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டுமென ராஜசேகர், அவர் மனைவி சுதா இருவரும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
"Next week ல இருந்து நா College போகலக்கா. கல்யாண வேலையெல்லாம் இருக்குல்ல" ரொம்ப பொறுப்பானவள் போல சுஜிதா சொல்ல நக்கலாய் பார்த்தார்கள் அனுவும் ஸ்வேதாவும்.
"ஆமா, ரொம்ப பெரிய மனுஷி. இவங்க தான் எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்றாங்க. " ஸ்வேதா வம்பிழுக்க எல்லோரும் சிரித்தார்கள்.
இன்னைக்கி பணம் கைக்கு கெடச்சிடும். நாம நாளைக்கே போய் நகையெல்லாம் எடுத்துட்டு வந்துடலாம்.
நகையெல்லாம் வேணாம் மாமா. என்கிட்ட ஏற்கனவே 25 பவுண் இருக்கு, அம்மா வாங்கிக் குடுத்தது.
அதெல்லாம் இல்லம்மா , கல்யாண செலவெல்லாம் அருணோட தாத்தாவே பாத்துக்கறேன்னு சொல்லிட்டாரு. எங்க பொண்ணுக்கு நாங்களும் எதாலும் பண்ணணும்ல.
"அதுக்கில்ல மாமா " அனு பேசத்தொடங்கும் முன் தடுத்தார் சுதா.
சும்மா இரு அனு, எப்பப் பாத்தாலும் எல்லாத்தையும் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு.
"அது தானே, கல்யாணப் பொண்ணு மாதிரியா நடந்துக்குறா இவ " அம்மாவுக்கு ஒத்து ஊதினாள் சுஜி.
"ஆமா, பெரிய மனுஷி சொல்லிட்டாங்க " ஸ்வேதா மீண்டும் கலாய்க்க அங்கே தொடங்கியது அவர்களின் வழக்கமான சண்டை.
ராஜசேகர் ஒரு Private company யில் Accountant ஆக பணி புரிந்தார். குடும்ப செலவுக்கு அவர் வருமானமே போதுமாக இருந்தாலும், ஸ்வேதாவும் படிப்பு முடிந்ததும் வேலைக்குப் போகத் தொடங்கினாள். அவர்கள் குடும்பம் ஓரளவு வசதியாகவே இருந்தாலும் தன் திருமணத்துக்கு செலவு செய்வது அனுவுக்கு வருத்தமாகவே இருந்தது.
எப்படியும் தன் திருமணம் முடிந்ததும் ஸ்வேதாவிற்கு வரன் பார்க்கத் தொடங்குவார்கள். இப்போது இப்படி செலவு செய்தால் ஸ்வேதா திருமணத்தை எப்படி நடத்துவார்கள் என்பது அவளுக்கு கவலை. அவள் அருணை திருமணம் செய்ய முடிவெடுத்ததற்கு ஸ்வேதா திருமணம் தள்ளிப்போகக் கூடாது என்ற எண்ணம் முக்கிய காரணம்.
நகைகள் எடுத்து முடிய, ஆடைகள் வாங்கும் படலம். எந்தவொரு பண்டிகைக்கும் ஏழெட்டு கடைகள் ஏறி இறங்கி அம்மாவுடன் சேர்ந்து துணிகள் வாங்குவதில் இருந்த ஈடுபாடு இப்போ அனுவிற்கு இல்லை.
ஆனால் சுஜிக்கும் ஸ்வேதாவுக்கும் Shopping செய்ய ஒரு நாள் போதவில்லை. வேறு வழியின்றி அவர்கள் கூப்பிடும் போதெல்லாம் ஆர்வமேயில்லாம் அவர்களோடு போய் வந்தாள் அனு.