அத்தியாயம் : 19

2.3K 48 16
                                    

"...தொலைந்துவிட்டேன்
என அறிந்தும்
மீண்டும் மீண்டுமாய்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
என்னையல்ல,
எனக்குள் தொலைந்துவிட்ட
உன்னை..."...

என்று அவனது விழிகளுக்குள் அவள் வீழ்ந்தாளோ அன்றிலிருந்தே அவள் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறாள் என்பதை அவள் நன்கே அறிந்துதான் இருந்தாள்...ஆனாலும் இதுதான் காதலா என்பதில்தான் கொஞ்சம் தெளிவற்றிருந்தாள்...ஆனால் இன்று கடற்கரையினில் நிகழ்ந்த அவனுடனான சந்திப்பின் பின்னர் அவளின் அந்தக் குழப்பமும் தீர்ந்திருந்தது...

அன்றைய தினம் நூலகத்தில் நிகழ்ந்த அவனுடனான சந்திப்பின் பின் அவள் அவன் மேல் கொஞ்சம் கோபமாக இருந்தாளென்றுதான் சொல்ல வேண்டும்...அதில் அவள் மனம் மிகுந்த வேதனைக்கும் உள்ளாகியிருந்தது...அடுத்து வந்த இரு தினங்களும் அவளின் பாட்டியின் பிறந்தநாளிற்காய் ஊருக்குச் சென்று வந்த பின்னர்தான் அவளின் உள்ளம் கொஞ்சமேனும் அமைதியடைந்திருந்தது...

இதற்காக அவள் இரண்டு நாட்கள் கல்லூரிக்கு லீவு போட்டிருந்தாள்...ஆனால் அந்த இரு நாட்களும் அவன் அவளைத் தேடுவானென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை...அதிலும் இப்போதெல்லாம் அவன் அவளை முறைத்துக் கொண்டே திரிவதால் நிச்சயம் அவளின் விடுப்பு அவனைப் பாதித்திருக்காதென்றுதான் எண்ணியிருந்தாள்...ஆனால் இன்று கடற்கரையில் வைத்து அவன் சகஜமாகவே அவளின் விடுப்பு பற்றிக் கேட்கவும் அவள் கொஞ்ச நேரத்திற்கு இந்த உலகத்தையே மறந்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்...

ஆரம்பத்தில் அவனைக் கண்டதும் பார்வையில் அவனை அவள் அந்நியமாகக் காட்டிக் கொண்டதே அவன் மேல் அவளுக்கிருந்த கோபத்தினால்தான்...ஆனால் அவன் அவளருகே வந்து பல நாட்கள் பேசிப் பழகியவன் போல் உரையாட ஆரம்பிக்கவும்,அவளுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன...எங்கே இன்னும் கொஞ்சம் நேரம் அவனருகே இருந்தால் மொத்தமாய் அவன் பக்கமே சாய்ந்துவிடுவோமோ என்ற பயத்தினில்தான் அவள் அங்கிருந்து விரைவிலேயே கிளம்ப எத்தனித்தாள்..

அவனும் நானும்Where stories live. Discover now