மடகாஸ்கரில் இருக்கும் அஸாரா, மீஸான் மற்றும் மீஸானின் பெற்றோர் தாய்நாட்டுக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தங்களைச் செய்த வண்ணம் இருக்க, திடீரென்று அங்கு நிகழ்ந்தது யாருமே எதிர்பாராத ஒன்று!
அஸாராவின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டுதான் தம் கண்ணுட் கருமணியாக இருந்த ஒரேயொரு செல்ல மகளையும் பாதுகாப்பான கைகளில் ஒப்படைத்துவிட்டே செல்ல முடிவுசெய்தனர் அஸாராவும் மீஸானும்! ஆனால் இறைவனின் திட்டம் வேறு மாதரியாக அமைந்துவிட்டது.
அவர்கள் உண்மையில் வீட்டிலிருந்து கிளம்பியது இந்தியாவுக்குத்தான். அஸாராவைப் பீடித்திருந்த தீராத நோய் பற்றி அய்லாவுக்குத் தெரியப்படுத்த இவர்களுக்கு சற்றும் தைரியமில்லை. அதற்கான சிகிச்சைக்கென்று இந்தியாவுக்குச் சென்றவர்கள் மடகாஸ்கரில் நிலவும் சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு இந்தியாவிலிருந்து நேராக மீஸானின் தாய் மண்ணுக்கு விரைந்தார்கள்.
வருடங்கள் கழித்துப் பெற்றோரைக் கண்டவுடன் மீஸானுக்கு கால்கள் தரையிலே இல்லை. அவர்களது தேவைகளைக் கேட்டுத் தேவைக்கு அதிகமாகவே எல்லாவற்றையும் பூர்த்தி செய்து கொடுத்தவர் தான் பிறந்த ஊரின் காற்றை சுவாசித்துப் பல வருடங்கள் ஆகிப் போய்விட்டதால் ஊரைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டுத் தன் பெற்றோருடனும் மனைவியுடனும் வாடகை வாகனத்தில் கிளம்பிச் சென்றார்.
இறைவனின் நாட்டம். அந்த வாகனம் ஒரு பெரிய விபத்தில் சிக்குண்டு அந்த நால்வருக்கும் பிரியாவிடை கொடுத்து அவர்களை இறைவனிடமே அனுப்பி வைத்தது. நோயின் மூலம்தான் தன்னுடைய முடிவு என்ற மனநிலையில் இருந்த அஸாராவும் தன் மகளின் முகம் மனக்கண்கள் முன்னே வந்து போக, நிரந்தரமாகத் தன் கண்களை மூடிக்கொண்டார்.
அந்த செய்தியைக் தாங்க முடியாமல் தானும் அவர்களுடன் சென்றிருந்தால் பரவாயில்லையே என்று இங்கே ஒரு உயிர் துடித்துக் கொண்டிருந்தது, அய்லா ஜஹான்!
அவர்கள் நால்வரும் மரணித்த செய்தி அய்லாவின் செவிகளுக்குள் வந்து நுழைய, உயிரிருந்தும் சப்த நாடியும் ஒடுங்கிப்போய் ஜடம்போல் ஃபரீதாவின் மடிக்குள் கிடந்தவள் மனதிலிருந்த கனத்தையெல்லாம் கண்ணீராய் மாற்றி வெளியே கொட்டினாள்.
YOU ARE READING
பூத்த கள்ளி ✔
Spiritualபதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...