_-17-_

168 21 6
                                    

துணியில் பட்ட அப்பிள்ச்சாற்றைக் கழுவினாலும் அது ஏற்படுத்திய மறு அவ்வாறே இருப்பதைப்போல ஒரு வாரத்துக்கு முன் நடந்த தாங்கொணா சம்பவத்தை அய்லாவின் கண்ணீர் கொஞ்சமாகக் கழுவி நீக்க முயன்றாலும் அந்த நினைப்பு அவள் மனதிலிருந்து நீங்காமல் அவ்வப்போது அவளை வாட்டிக் கொண்டிருந்தது.

பெற்றோரின் இழப்பு ஏற்பட்டு ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் அய்லா தன் புத்தகங்களின் மீது கவனத்தைப் பதிக்க முயன்றாள்.

பாடசாலைக்குக் கிளம்பிச் செல்லும்போது "உம்மா.. வாப்பா.. போய்ட்டு வாரேன்" என்று பழக்க தோஷத்தில் கத்திவிட்டுப் பின்பு உண்மையை உணர்வதும் அவ்வப்போது அஸாராவும் மீஸானும் கதைப்பதுபோல பிரமை உண்டாவதும் அவளது பஞ்சு மனதை (கண்)நீரில் நனைத்தமையைத் தடுக்க முடியவில்லை.

ஃபரீதாவின் தேற்றுதலிலும் யாசிர் மற்றும் அலீஷாவின் கவனிப்பிலும் அஸ்ல் கொடுத்த நம்பிக்கையிலும் அவளுக்குத் தற்போது தன் கவனத்தைக் கொஞ்சம் படிப்பில் காட்ட முடியுமாக இருந்தது.

ஹனியா துணைக்கு வருவதாகக் கூறினாலும் அய்லா அவளைப் பெரிதாக சிரமப்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் அய்லா, தன் தாய் தந்தையின் ஞாபகத்தில் உறைந்திருக்கும் போதெல்லாம் அவளுக்காக வருந்துவது ஹனியாவும்தான்.

தவிர, ஹனியா தன்னுடன் தன் வீட்டில் இருக்கும் போது அஸ்லும் இருப்பதால் தன் தோழிக்குத் தெரியாத இரகசியம் எப்படியேனும் பரகசியமாகக் கூடாது என எண்ணியவாறு நொடிகளைக் கடத்துவதே அய்லாவுக்கு வேலையாய்ப் போயிற்று. தன் நிழலாய் ஒட்டித்திரியும் அவளிடம் அதனை மறைக்க வேண்டி ஏற்பட்டதால் குற்றவுணர்வு வேறு அவ்வப்போது தலைதூக்கிப் பார்த்தது.

நான்கைந்து நாட்கள் பாடசாலைக்குச் செல்லவில்லையாதலால் இனிமேல் தவறாமல் சென்று பாடசாலையில் கடைசியாக நடத்தப்படும் கருத்தரங்குகளுக்காவது தவறாமல் செல்ல வேண்டும் என்று முனைப்புடன் கற்க முற்பட்டாள்.

பூத்த கள்ளி ✔Where stories live. Discover now