தனது கட்டிலில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பொதியை கையிலெடுத்தவள் சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
நாளை பாடசாலை செல்வதற்காகத் தான் வீட்டு வேலைகளை இன்னும் செய்து முடிக்காமல் இருந்தது நினைவில் வர, அந்தப் பொதியை எடுத்துப் பத்திரமாக அலுமாரியில் வைத்து விட்டுப் பாடப் புத்தகங்களுள் மூழ்கிப் போனாள்.
அப்போது ஹனியாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது அய்லாவுக்கு. அதையேற்று,
"அஸ்ஸலாமு அலைக்கும் ஹனீ..." என்றாள்.
"வஅலைக்குமுஸ்ஸலாம். ஏன் டி வெள்ளீக்கிழம என்னைத் தனிய தவிக்க விட்ட? ஒருநாளும் ஸ்கூல் கட் பண்ணாதவ ஏன்டி திடீர்னு கட் பண்ணின? ஏதாவது சுகமில்லயா?" என்று மூச்சு விடாமல் ஹனியா கேட்க,
"கொஞ்சம் சுகமில்ல தான். உம்மா போக வேணாம்னுட்டா. அதான்...." என்று இழுத்தாள்.
"உண்மையாவே சுகமில்லயா? ஏன் ஏன்?" என்றாள் ஹனியா உண்மையான அக்கறையுடன்.
"அதை விடேன். இப்போ சரியாயிடுச்சி அல்ஹம்துலில்லாஹ். சரி ஸ்கூல்ல என்ன நடந்துச்சி?" என்று அய்லா கதையை மாற்ற முயற்சித்தாலும் ஹனியா விடுவதாகத் தெரியவில்லை.
"நேத்து உன் வீட்டுக்கு வரனும்னு தான் இருந்தேன் அய்ல். எத்தன முறை கால் பண்ணேன் தெரியுமா?" என்று அவள் கவலைப்பட,
'நீ வராமலிருந்ததே நல்லது ஹனி' என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள் அய்லா.
வேறு என்னவெல்லாமோ காரணங்களைக் கட்டாக அடுக்கி அவளைச் சமாதானம் செய்து அழைப்பைத் துண்டிக்கையில் அய்லாவுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.
அடுத்த நாள் காலையில் பஜ்ர்த் தொழுகைக்காக எழுந்தவள் சோம்பல் முறித்தவாறு சில நிமிடங்கள் கட்டிலில் அமர்ந்திருந்தாள். இரண்டு நாட்களில் நடந்து முடிந்த சம்பவங்கள் அவளது மனக்கடலின் அலைகளைக் கிளப்பி நுரை வரச் செய்தன.
'நான் ஒருவரது மனைவி!' என்ற எண்ணமே உடலெல்லாம் புல்லரிக்கச் செய்தது. அதை வேகமாக உதறித் தள்ளி விட்டு வுழூச் செய்வதற்காக எழுந்து சென்றாள்.
YOU ARE READING
பூத்த கள்ளி ✔
Spiritualபதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...