இருட்டில் எதிலோ மோதிக் கொண்டவள் திகைத்து அங்குமிங்கும் நோக்க, அங்கே அருகில் தான் மின்விளக்கின் சுவிட்ச் இருப்பது உரைத்தது. சற்று பின்னோக்கி நகர்ந்து சுவரைத் தடவிப் பிடித்து விளக்கை ஔிர விட்டவள் கண்களைக் கசக்கியவாறு சுற்றுமுற்றும் பார்த்தாள்.
ஒன்றுமில்லையங்கு. படிக்கட்டுக்கட்டுகளின் வழியே மேலேறிச் செல்லும் கைப்பிடியில் தான் அவள் மோதிக் கொண்டிருக்கிறாள். ஒரு பெருமூச்சை விட்டவள் உருண்டு சென்ற தண்ணீர் போத்தலை எடுத்துக் கொண்டு மின்விளக்கை அணைத்து விட்டுத் தனதறைக்குச் செல்லும் நோக்குடன் நடந்தாள்.
அங்கே சென்று கட்டிலில் அமர்ந்து சிறிது தண்ணீரைக் குடித்து விட்டுத் தலையணையை வைத்து சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அவள் அரைவாசி வாசித்து விட்டு வைத்திருந்த நாவல் கண்களைச் சிமிட்டியதால் கையை நீட்டி ஆர்வத்துடன் அதைக் கைப்பற்றியவள் நொடியில் அதில் மூழ்கிப் போனாள்.
திடீரென ஒரு மின்னல்க் கீற்று கண்ணாடி ஜன்னல் வழியே பளிச்சிட்டதைத் தொடர்ந்து ஓரிடியிடித்து ஓய்ந்தது. அதில் மிரண்டவள் அந்த ஆங்கில நாவலை மூடி வைத்து விட்டுக் கடிகாரத்தை விளித்தாள். அதிகாலை மூன்று மணியைக் காட்டி நகைத்தது அதன் முகம். இப்போது தான் முதன்முறையாக ஒரு கொட்டாவி வெளியேற, கண்கள் வலித்தன. மின் விளக்கை அணைத்து விட்டுத் தூங்க ஆயத்தமானாள்.
'இன்டைக்கி அஸ்லக் காணவேயில்லயே... அவர் கூட என்னோட பேசல்ல. அவ்வளவு என்ன தான் பெரிய வேலையோ?' என்று நினைத்துக் கொண்டு எழுந்தவள் மெதுவாகச் சென்று அஸ்லின் அறையை எட்டிப் பார்த்தாள்.
அவன் பெருமூச்சுக்களை விட்டபடியே நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு கசப்பான புன்னகையுடன் திரும்பி வந்தவள் தானும் உறங்கலானாள்.
***
அய்லாவின் நாட்கள் முயல்ப் பாய்ச்சலில் வேலியைத் தாண்டிக் கடந்து விட்டன. அவள் இலங்கை திரும்பும் நாளும் வந்தது. சொல்லொனாத் துயருடனே தனது கடைசி உடையையும் லக்கேஜினுள் வைத்து மூடினாள். அதனுடன் சேர்த்தே தனது இதயத்தையும் மூடி விட்டதைப் போன்றதோர் உணர்வு ஏற்பட்டது.
YOU ARE READING
பூத்த கள்ளி ✔
Spiritualபதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...