_-34-_

130 16 21
                                    

கரு முகில்கள் விண்ணைச் சூழ்ந்த போது பலத்த காற்றுமடிக்க, சோவென்று பொழிந்தது மழை. அதில் கூசியது போலத் தன் தலையைத் தாழ்ந்த நினைத்துத் தோற்றது தென்னை. அதைப் பார்த்த நாணல் ஓர் ஏளனச் சிரிப்புடன் நிமிர்ந்த போது அதன் கொட்டத்தை அடக்கும் நோக்கில் ஒரு மழைத்துளி சிரசில் விழுந்தது; நாணல் தலைகுனிந்தது.

யன்னலுக்கு வெளியே தன் கண்களிரண்டையும் அலைய விட்டவாறு பார்வையால் இயற்கையை மேய்ந்து கொண்டிருந்த அய்லாவுக்குத் தன்னைச் சுற்றி நடப்பதெதுவும் சரியாகப் புரியவில்லை. இப்படியே இந்த யன்னலருகே உட்கார்ந்து இந்தக் காட்சியையே கண் குளிரப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருந்தது.

எங்கோ டிங்டிங்கென்ற ஓசை ஒலித்த போது தான் உணர்ந்தாள் அது அடுத்த பாடத்துக்கான மணி என்பதை. கண்களை இருமுறை மூடித் திறந்தவள் மற்ற மாணவர்களை ஆராயலானாள். அனைவரும் புத்தகங்களிலும் பேச்சிலும் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தனர்.

குனிந்து தன் மேசையைப் பார்த்த போது அங்கும் விரிந்ததொரு புத்தகம் இருந்தது. அதை மூடி விட்டு ஐந்து மேசைகள் தள்ளியிருந்த ஹுதாவினிடத்தை நோக்கினாள். இவள் மனதைக் குழப்பி விட்டு அவள் சாதாரணமாகத் தன் தோழியருடன் கதைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்கையில் கோபம் வந்தது.

தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "ஹுதா!" என்றாள். அவளுக்குக் கேட்கவில்லை போல. மீண்டுமொரு முறை அழைத்த போது ஹுதா திரும்பிப் பார்த்துப் புருவத்தையுயர்த்தினாள். 'யா அல்லாஹ்! எல்லாமே ஒரு சோதனயாவே இருக்குது' என்று முறையிட்டவள் ஹுதாவினருகே எழுந்து சென்றாள்.

"என்ன அய்லா?" அவள் ஒன்றுமறியாத பச்சைக் குழந்தை கூடத் தோற்றுப் போகும்படியான அப்பாவி முகபாவத்தை மாட்டிக் கொண்டு அய்லாவிடம் கேட்ட போது எரிச்சலாக இருந்தது அவளுக்கு.

"விளையாடாம சொல்லேன் ஹுதா. அது உனக்கெப்படித் தெரியும்?" என்றாள். அப்போது அடுத்த பாடத்துக்கான ஆசிரியர் ஒரு கையில் இரு தடித்த புத்தகங்களுடன் கண்ணாடியை மறு கையால் சரி செய்தவாறு வகுப்பினுள் சலாத்துடன் நுழைந்தார்.

பூத்த கள்ளி ✔Where stories live. Discover now